க்ரைம்

மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தானும் தீக்குளித்த கணவன் - இருவரும் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தாம்பரம் அருகே மனைவியை சந்தேகப்பட்டு தீவைத்து எரித்துக் கொல்ல முயன்ற கணவன், தன்மீதும் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்துத் தற்கொலை முயன்ற சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி கணவர், மனைவி இருவரும் உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே ஆதனூர் கிராமம் ஜெயலட்சுமி நகரில் வசிக்கும் செந்தில்குமார் (44) டைலராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கலையரசி (38) செங்கல்பட்டு அருகே வீராபுரம் கிராமத்தில் அங்கன்வாடி ஊழியராக பணி செய்கிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு அனைவரும் உறங்க சென்றனர். அதிகாலை கணவன் - மனைவி இருவரும் இருந்த அறையில் தீப்பிடித்து எரிந்ததாகவும், அலறல் சத்தம் கேட்டு மற்றொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்த அவரது மகள் பார்த்துவிட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் தீக்காயத்துடன் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தனர். சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸார் விசாரணையில் செந்தில் குமார் அளித்த வாக்குமூலம்: மகேந்திரா சிட்டி அருகே உள்ள வீராபுரம் கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி வரும் கலையரசிக்கும் அங்குள்ள முக்கிய அரசியல் கட்சி நிர்வாகிக்கும் நட்பு இருந்தது தெரிந்தது. பின்னர் எனது மனைவியின் தொலைபேசியில் உள்ள வாட்ஸ் அப் செயலியை சோதனை செய்து பார்த்ததில் அவர் அடிக்கடி கட்சி நிர்வாகியுடன் பேசி வருவதை உறுதி செய்து கொண்டேன்.

இதனால் ஆத்திரமடைந்து கடந்த 27ம் தேதி கூடுவாஞ்சேரியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இருந்து ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கி வந்து 28ம் தேதி அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த எனது மனைவி மீதும் என் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டேன் என்றார். சிகிச்சை பலனின்றி கலையரசி உயிரிழந்தார். தொடர்ந்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT