ஜார்கண்ட் மாநிலம் டாடாநகரில் இருந்து சென்னை வழியாக எர்ணாகுளத்துக்கு இயக்கப்பட்ட விரைவு ரயிலில், 16 கிலோ கஞ்சா கடத்திய இளைஞரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் மற்றும் ஆர்.பி.எஃப் போலீஸார் நேற்று முன்தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஜார்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து சென்னை பெரம்பூர் வழியாக எர்ணாகுளத்துக்கு செல்லும் விரைவு ரயில் வந்தது. அந்த ரயிலின் பொதுபெட்டியில் இருந்து இறங்கி வந்த பயணிகளை கண்காணித்தனர். அப்போது, ஒருவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை பிடித்து அவரது பைகளை சோதித்தபோது, அதில் 16 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.3.20 லட்சம்.
இதையடுத்து, அந்த இளைஞரை ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா பகுதியை சேர்ந்த தவம் (44) என்பதும், இவர் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.