க்ரைம்

சென்னை | குடிநீர் இணைப்பு வழங்க ரூ.4000 லஞ்சம்: உதவி பொறி​யாள​ருக்கு 5 ஆண்டு சிறை

செய்திப்பிரிவு

சென்னை: குடிநீர் இணைப்பு வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்ட உதவி பொறியாளருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையை சேர்ந்த பரந்தாமன் என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு தனது வீட்டுக்கு புதிய குடிநீர் இணைப்பு கேட்டு தண்டையார்பேட்டையில் உள்ள குடிநீர் வடிகால் வாரியத்தில் விண்ணப்பம் கொடுத்துள்ளார். இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து புதிய குடிநீர் இணைப்பு வழங்க, தண்டையார்பேட்டை குடிநீர் வழங்கல் வாரிய உதவி பொறியாளர் பார்த்தசாரதி, ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத பரந்தாமன், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார். போலீஸாரின் அறிவுரைப்படி லஞ்ச பணத்தை பரந்தாமன் கொடுத்தபோது அதை பெற்றுக்கொண்ட உதவி பொறியாளர் பார்த்தசாரதி கையும், களவுமாக கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பிரியா முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி பார்த்தசாரதிக்கு, 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

SCROLL FOR NEXT