தாம்பரம்: நாவலூர் மற்றும் ஈஞ்சம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் எலைட் எனப்படும் அயல்நாட்டு தயாரிப்பு மதுபான வகைகளை விற்பனை செய்யும் கடையில், விற்பனை செய்யப்பட்ட ரூ.1.49 கோடி மதிப்பிலான மதுபாட்டில்களுக்கான தொகையை, அரசு கணக்கில் செலுத்தாமல் உள்ளதை சிறப்பு தணிக்கை குழுவினர் கண்டுபிடித்து நோட்டீஸ் வழங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புறநகர் பகுதியான நாவலூர் மற்றும் ஈஞ்சம்பாக்கம் ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் நிறுவனத்தின் எலைட் எனப்படும் அயல்நாட்டு தயாரிப்பான உயர்ரக மதுபான வகைகள் விற்பனை செய்யப்படும் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளில், 2 மேற்பார்வையாளர்கள் மற்றும் 4 விற்பனையாளர்கள் பணியில் உள்ளனர். இந்நிலையில், மேற்கண்ட மதுபானம் விற்பனை செய்யும் கடைகளில் கடந்த வாரம் ஆண்டு தணிக்கை நடைபெற்றதாக தெரிகிறது.
இந்த தணிக்கையின் போது, இருவேறு கடைகளிலும் உள்ள இருப்பு மதுபானங்களுக்கும் மற்றும் அரசு கணக்கில் செலுத்திய தொகைக்கும் பெரிய அளவில் வேறுபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, சிறப்பு தணிக்கைக்குழு பரிந்துரை செய்யப்பட்டு அக்குழுவினர் மேற்கண்ட கடைகளில் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வில் நாவலூர் கடையில் சுமார் ரூ.1.36 கோடி மதிப்பிலான மது பாட்டில்களும் மற்றும் ஈஞ்சம்பாக்கம் கடையில் ரூ.13 லட்சம் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.
ஆனால், அதற்கான தொகையை அரசு கணக்கில் செலுத்தாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், மது பாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கடையில் பணியாற்றும் 2 மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களுக்கு மேற்கண்ட சம்பவம் தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மோசடி குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருவதாக டாஸ்மாக் அதிகாரிகளின் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.