சிதம்பரம்: கடலுக்கு குளிக்க வந்தவர்களிடம் குடிபோதையில் தகராறு செய்த இளைஞர்கள் நால்வர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே, ‘இது எங்களுடைய ஆட்சி, உங்களால் என்ன பண்ண முடியும்?’ என்று கேட்டு போதையில் இருந்த இளைஞர்கள் தாக்குதல் நடத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறியுள்ளார்.
குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்து, அவரது மனைவி பவானி, சத்தியமூர்த்தி, மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா, உறவினரான சிதம்பரத்தைச் சேர்ந்த திருநங்கை யாழினி மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட 7 பேர் மற்றும் 3 குழந்தைகள் ஆகியோர் சமீபத்தில் புதுச்சத்திரம் அருகே உள்ள பெரியகுப்பம் கடற்கரைக்கு குளிக்கச் சென்றனர். அனைவரும் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு குடிபோதையில் வந்த தியாகவல்லி லெனின் நகர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கவேல் (24), தினேஷ் (21),சரவணன் (22), பிரவீன் (24) ஆகிய 4 பேரும், குளித்துக் கொண்டிருந்தவர்களிடம் பிரச்சினை செய்து, கையால் தாக்கி தகராறு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து, புதுச்சத்திரம் போலீஸார், மாணிக்கவேல் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தினேஷை போலீஸார் கைது செய்தனர். மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் கூறியது: “கடலுக்கு நான், எனது அண்ணன், அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் அனைவரும் குளிக்கச் சென்றோம். அப்போது குடித்துவிட்டு சிலர் அங்கு வந்தனர். அவர்கள் போதையில் இருப்பதால், கடலில் குளித்துக் கொண்டிருந்த நாங்கள் அனைவரும் வெளியே வந்தோம். அப்போது மதுபோதையில் இருந்தவர்கள், என்னையும், அண்ணியையும் அங்கேயே விட்டுவிட்டுச் செல்லும்படி கிண்டல் செய்து தகாத வார்த்தைகளால் பேசினர்.
இதனால், எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போது நான் கையில் பச்சைக் குத்தியிருந்த கலசத்தைப் பார்த்துவிட்டு, என்னை யார் என்று கேட்டனர். அதற்கு நான் நகரச் செயலாளராக இருப்பதாக கூறினேன். இந்த ஒரு வார்த்தையைத்தான் கூறினேன். அதற்கு நீ நகரச் செயலாளராக இருந்தால், எனக்கு என்ன? இந்த கலசம் எல்லாம் எங்களுக்கு கீழேதான், என்று கூறி தகாத வார்த்தைகளால் திட்டயதோடு, இது எங்களுடைய ஆட்சி, உங்களால் என்ன பண்ண முடியும் என்று கூறி எங்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
திருமணமாகி இரண்டு குழந்தைகளைப் பெற்ற நானே வெளியே வரமுடியவில்லை என்றால், எந்தப் பெண்ணால் வெளியே வரமுடியும். மதுபோதையில் இருந்தவர்கள் போன் செய்தவுடன் அங்கு 20 இளைஞர்கள் அவர்களுக்கு ஆதரவாக வந்து நின்றனர். எங்களால் போன் செய்ய முடியவில்லை. கையில் குழந்தையை வைத்திருப்பதால், அங்கிருந்து தப்பித்து வருவதைத்தான் நான் பார்த்தேன். என் குழந்தைகளை அங்கு விட்டுவிட்டு வரமுடியாது. இதையெல்லாம் யார் கேட்பது? அந்த வீடியோவில் எங்களுடைய குழந்தைகள் அழுவதைக்கூட பார்க்கலாம்.
நான் ஒரு பெண். கட்சி ரீதியாக எதுவும் பேசவில்லை. எனது கையில் இருக்கும் கலசம் எப்போதோ குத்தியது, அதைக்கேட்டு எங்களிடம் சண்டை இழுத்தனர். இதையெல்லாம் யார் தட்டிக்கேட்பது? இதையெல்லாம் தட்டிக்கேட்டே ஆக வேண்டும். அதிலும் மதுபோதையில் இருந்த ஒருவர், நாங்கள் அப்படித்தான் அடிப்போம், நீ யாரிடம் வேண்டுமானாலும் போய் சொல்லும், எவன் வருகிறான் என்று பார்ப்போம் என்று கூறினார். அங்கிருந்த திருநங்கை அவர்கள் காலில் எல்லாம் விழுந்து, பிரச்சினைக்குப் பிறகுதான் வெளியே வந்தோம்,” என்று கூறினார்.
இதனிடையே, பெண்களுக்கு எதிராக இதுபோன்ற சம்பவங்கள் இந்த ஆட்சியில் நிகழ்வது இது முதல் முறையல்ல. இதுபோன்ற சம்பவங்களை பலர் வெளியே கூறுவதில்லை, என்று சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.