திருச்சி: திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஆர்சி மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 10 மாணவர்கள் அரையாண்டு கடைசித் தேர்வு எழுதிவிட்டு, இன்று மதியம் 2 மணியளவில் குடமுருட்டி அருகே உள்ள அய்யாளம்மன் காவிரி படித்துறைக்கு குளிக்க வந்தனர்.
படித்துறையில் குறைந்தளவு தண்ணீர் சென்றதால், ஆற்றின் மையப்பகுதிக்கு குளிக்கச் சென்றனர். தெர்மாகோல் மீது படுத்துக் கொண்டு சிலர் குளித்தனர். அப்போது சுமார் 3.45 மணியளவில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால், 2 மாணவர்கள் நீரில் சிக்கிக் கொண்டனர். அவர்களை காப்பாற்றச் சென்ற மாணவனும் சிக்கினார். ஓரளவு நீச்சல் தெரிந்த 7 மாணவர்கள் கரை சேர்ந்தனர்.
ஆனால் சுழலில் சிக்கிக் கொண்ட பாலக்கரை விக்னேஷ் (16), ஆழ்வார்தோப்பு ஜாகீர் உசேன் (15), எடமலைப்பட்டி புதூர் சிம்பு (16) ஆகிய 3 மாணவர்களும் கரை சேரவில்லை. செய்வதறியாது திகைத்த பிற மாணவர்கள் கதறியழுதனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் விவேகானந்தசுக்லா, ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் கிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான போலீஸார், திருச்சி மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஸ், கூடுதல் மாவட்ட அலுவலர் சத்தியவர்தன் ஆகியோர் தலைமையிலான 30க்கும் மேற்பட்டத் தீயணைப்புத்துறையினர் நீரில் மூழ்கிய மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் அங்கு வந்து கதறியபடி நின்றனர்.
இதற்கிடையே பெரம்பலூர் ஸ்கூபா டைவிங் ஏட்டு எம்.இன்பராஜ் தலைமையிலான வீரர்கள் வரவழைக்கப்பட்டு மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இரவு 8.30 மணி வரை தேடியும் மாணவர்களை மீட்க இயலவில்லை. நீரோட்டம் அதிகமாக இருந்ததாலும், இரவு நேரமானதாலும் தேடும் பணியை கைவிட்டு, நாளை காலை 6 மணி முதல் தேடும் பணி தொடங்கத் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் மூன்று பேர் மூழ்கிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.