சென்னை: சென்னையில் கார் பைனான்சியரை கடத்திய வழக்கில் பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை சாலிகிராமத்தில் வசிக்கும் துரை ரகுபதி, கார்களுக்கு பைனான்ஸ் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் தன்னிடம் மாருதி கம்பெனி கார் அடமானத்துக்கு இருப்பதாக முகநூல் மூலம் விளம்பரம் செய்துள்ளார். இதை பார்த்த குன்றத்தூரை சேர்ந்த கவுதம் என்பவர், துரை ரகுபதியை தொடர்புகொண்டு காரை தான் வாங்கிக் கொள்வதாகவும், கோயம்பேடு பகுதிக்கு காருடன் வரும்படியும் கூறியுள்ளார்.
இதை நம்பிய துரை ரகுபதி, கடந்த 19ம் தேதி இரவு காரில் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே சென்றுள்ளார். அங்கு தயராக இருந்த கவுதம் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் துரை ரகுபதியை அதே காரில் கடத்திச் சென்றனர். பின்னர், அவரை தாக்கி கார் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனர். இது தொடர்பாக துரை ரகுபதி அளித்த புகாரின் பேரில் சிஎம்பிடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
தீவிர விசாரணைக்குப் பிறகு கடத்தலில் சம்பந்தப்பட்ட கவுதம், அவரது தோழி திருவல்லிக்கேணியை சேர்ந்த ஸ்வேதா, கோயம்பேடு நாகராஜன், அண்ணாநகர் கிஷோர் பாலாஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கார் மற்றும் ஆப்பிள் போன் ஆகியவற்றை போலீஸார் மீட்டனர். மேலும், தலைமறைவாக உள்ள சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.