நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர், மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்தார். உடல் பாகங்களை பையில் வைத்து வெளியே கொண்டு சென்றபோது அவரை போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சமாதானபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (36). இவரது மனைவி மரிய சந்தியா (30). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். சென்னையில் வசித்து வந்த இவர்கள் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள பால்குளம் அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறினர். தூத்துக்குடியில் உள்ள மீன் நிறுவனம் ஒன்றில் வேலைசெய்து வந்த மரிய சந்தியா மீது கணவருக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வீட்டில் வைத்து மதியம் மரிய சந்தியாவிற்கும், மாரிமுத்துவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதைப்போல் இரவிலும் ஏற்பட்ட தகராறில் மனைவியை தாக்கிய மாரிமுத்து ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளால் மனைவியை வெட்டி கொலை செய்துள்ளார். மனைவியின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டிய மாரிமுத்து, ரத்தம் கொட்டியதால் அவற்றை தண்ணீரில் கழுவியுள்ளார். பின்னர் உடல் பாகங்களை 3 பேக்குகளில் அடைத்து வைத்துள்ளார்.
அந்த பேக்குகளை வெளியே கொண்டு சென்று ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் போடுவதற்கு மாரிமுத்து திட்டமிட்டுள்ளார். இரவு நேரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வெளியே கொண்டு செல்ல முயன்றபோது வீட்டு முன்பு நின்றிருந்த நாய் மாரிமுத்துவை பார்த்து தொடர்ந்து குரைத்துள்ளது. அத்துடன் அவரை துரத்தியவாறு அவர் கொண்டு சென்ற உடல்பாகம் அடங்கிய பேக்கை கடித்து இழுத்து உள்ளது.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்து பேக்கில் என்ன இருக்கிறது என கேட்டுள்ளனர். இதற்கு மாரிமுத்து இறைச்சி இருப்பதாக கூறி சமாளித்தார். ஆனால் தொடர்ந்து சந்தேகமடைந்த மக்கள் உடனடியாக மாரிமுத்துவை சுற்றி வளைத்து பேக்குகளை திறந்து பார்த்தபோது அதில், மரிய சந்தியாவின் உடல் துண்டு துண்டான நிலையி்ல 3 பேக்குகளில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக பொதுமக்கள் அஞ்சுகிராமம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் அங்கு வந்து மரிய சந்தியாவின் உடல் பாகங்களை பறிமுதல் செய்து பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாரிமுத்துவை போலீஸார் கைது செய்து தீவிரமாக விசாரித்தனர். மாரிமுத்து கால் டாக்ஸி டிரைவராக இருந்துள்ளார்.
மேலும் கறிக்கடையிலும் அவ்வப்போது வேலை பார்த்துள்ளார். இவர் மீது நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் 2022ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு உள்ளது. மனைவியை துண்டு துண்டாக கணவர் வெட்டி கொலை செய்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.