சதீஷ் 
க்ரைம்

தி.நகரில் பட்டப்​பகலில் தனியார் வங்கிக்​குள் புகுந்து மேலாள​ருக்கு அரிவாள் வெட்டு

செய்திப்பிரிவு

சென்னை: தி.நகரில் வங்கிக்குள் நுழைந்து, மேலாளரை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். தி.நகர் பர்கிட் சாலையில் பிரபலமான தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில், சென்னை பொன்னியம்மன் மேடு பகுதியைச் சேர்ந்த தினேஷ் (33) என்பவர் சீனியர் மேலாளராக பணிபுரிகிறார்.

நேற்று இவர் பணியில் இருக்கும்போது, மதியம் 12.45 மணியளவில் வங்கிக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் தயாராக கொண்டு வந்த அரிவாளால் தினேஷை சரமாரியாக வெட்டினார். இதைக் கண்டு வங்கி ஊழியர்களும், வங்கி வாடிக்கையாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள், தாக்குதல் நடத்திய இளைஞரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர்.

தகவல் அறிந்து மாம்பலம் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். காயம் அடைந்த தினேஷை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும், தாக்குதல் நடத்திய நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

இதில், பிடிபட்டது கேரளாவைச் சேர்ந்த சதீஷ் (34) என்பது தெரிந்தது. இவரும், தாக்குதலுக்கு உள்ளான தினேஷும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அண்ணா சாலையில் உள்ள மற்றொரு தனியார் வங்கியில் ஒன்றாக பணி செய்துள்ளனர்.

அப்போது, சதீஷ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு நண்பரான தினேஷ்தான் காரணம் என நினைத்துள்ளார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அபிராமிபுரம் காவல் நிலையம், முதல்வர் தனிப்பிரிவு மற்றும் காவல் ஆணையருக்கு மெயில் மூலம் புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அபிராமிபுரம் போலீஸார் இரு தரப்பையும் நேரில் அழைத்து மேல் நடவடிக்கை இன்றி வழக்கை முடித்து வைத்துள்ளனர். அதன்பின்னர், தினேஷ் தி.நகர் வங்கியில் பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில்தான் சதீஷ், பழைய முன்விரோதத்தில் நேற்று தினேஷை அரிவாளால் வெட்டியுள்ளார். இந்நிலையில், சதீஷ் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT