க்ரைம்

சென்னை | பெட்ரோல் பங்க் உரிமம் பெற்றுத் தருவதாக கூறி ஐ.டி. ஊழியர் தம்பதியிடம் ரூ.50 லட்சம் மோசடி

செய்திப்பிரிவு

சென்னை: வேளச்சேரியில் பெட்ரோல் பங்க் உரிமம் பெற்றுத் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக ஜோதிடர் கைது செய்யப்பட்டார். சென்னை வேளச்சேரி, கருமாரியம்மன் நகர் விரிவு பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (41). இவர் கணவர் மணிகண்டன். மென்பொறியாளர்களான இருவரும், பெருங்களத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இருவரும் கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் ஜாதகம் பார்ப்பதற்காக ஜோதிடரான வெங்கட சுரேஷ் என்பவரது வீட்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது வெங்கட சுரேஷ், இருவரது ஜாதகமும் நன்றாக இருப்பதாகவும், தொழில் செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனவும் ஆசை வார்த்தை கூறி உள்ளார்.

இதை உண்மை என நம்பி, தொழில் குறித்து கேட்டுள்ளனர். அப்போது ஜோதிடர் , உங்களிடம் காலி இடம் இருந்தால் நீங்களும் பெட்ரோல் பங்க் தொடங்கலாம். அதற்கான உரிமத்தை நான் வாங்கித் தருகிறேன் என கூறி உள்ளார். இதையடுத்து தங்களுக்கு திருவண்ணாமலை, வேட்டவலம் பகுதியில் 65 சென்ட் காலி இடம் இருப்பதாக இருவரும் கூறியுள்ளனர்.

தொடர்ந்து, வெங்கட சுரேஷ் திருமுடிவாக்கத்தில் உள்ள விஜய்பாஸ்கரை தம்பதியினருக்கு அறிமுகம் செய்துள்ளார். விஜயபாஸ்கரின் தந்தை டெல்லியில் உளவுத்துறை உயர் அதிகாரியாக இருப்பதாகவும், அவருக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள் என அனைவரும், தெரியும் என்றும், அவரது தொடர்பு மூலம் பெட்ரோல் பங்க் உரிமம் வாங்கலாம், எனவே, ரூ.85 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதை நம்பிய தம்பதி, தங்களது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.50 லட்சத்தை அனுப்பியுள்ளனர். பணத்தை பெற்றுக் கொண்ட இருவரும் உறுதியளித்தபடி நடந்து கொள்ளாததுடன், பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. நேரில் சென்று கேட்டபோது, இருவரும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த கவிதா, இந்த மோசடி தொடர்பாக வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து வெங்கட சுரேஷ், விஜயபாஸ்கரை தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த வெங்கட சுரேஷை நேற்று கைது செய்தனர். விஜயபாஸ்கரை போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT