க்ரைம்

நெல்லை அருகே மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது

அ.அருள்தாசன்

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே நடுக்கல்லூர், கோடகநல்லூர் பகுதிகளில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி அருகே நடுக்கல்லூர் மற்றும் கோடகநல்லூர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் கேரளத்திலிருந்து கொண்டுவரப்பட்ட புற்றுநோய் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பவ இடத்தில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மருத்துவ கழிவுகளை தரம் பிரித்து அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்தார். இது தொடர்பாக சுத்தமல்லி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வந்தனர். கேரளாவிலிருந்து கழிவுகளை கொண்டு வந்து கொட்டி எரிப்பதற்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட சுத்தமல்லி பகுதியை சேர்ந்த மனோகர், பேட்டை பகுதியைச் சார்ந்த மாயாண்டி ஆகிய 2 பேரையும் சுத்தமல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.

கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடத்தில் தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினிகளை தெளித்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்து மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளபட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட தடய அறிவியல் துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையே கேரளத்திலிருந்து கழிவுகளை தமிழகத்து்கு கொண்டு வருவதை தடுக்க தீவிர சோதனை நடத்தப்படும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்தார்.

கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவ கழிவுகள் திருநெல்வேலி அருகே நீர்நிலைகளில் கொட்டப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக - கேரள எல்லைப் பகுதியில் சோதனையை தீவிரப்படுத்த தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.சீனிவாசன் ஆகியோர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இந்நிலையில் இரவு நேரங்களில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களை தணிக்கை செய்யும் பணிகளை அவர்கள் இருவரும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது, கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள், இறைச்சி கழிவுகள் உள்ளிட்ட கழிவுகள் தமிழகத்திற்குள் கொண்டு வரப்படாமல் தீவிர நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தனர். மேலும் இது தொடர்பாக ஆலோசனைகளும் வழங்கினர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறும்போது, “கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் உள்ளிட்டவைகள் தமிழ்நாட்டிற்குள் கொண்டு வராத வண்ணம் தீவிர சோதனைகள் மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், எலக்ட்ரானிக் கழிவுகள் உள்ளிட்ட பொருட்கள் தமிழகத்திற்குள் கொண்டுவந்து எரிக்கப்படுவது தொடர்பாக இதுவரை புகார்கள் வரப்பெறவில்லை.

இது தொடர்பாக புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதுபோல் கேரளாவில் இருந்து சட்ட விரோதமாக இறைச்சி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து தமிழகத்தில் கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக - கேரளா எல்லையான புளியறை பகுதியில் போலீசார், வருவாய்த் துறையினர், கால்நடை பராமரிப்புத் துறையினர் ஒன்றிணைந்து தற்போது சோதனைகள் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சோதனைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT