க்ரைம்

சென்னை | தொழிலதிபரிடம் நூதன முறையில் நகை மோசடி செய்தவர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: முதியவர்களைக் குறிவைத்து நூதன முறையில் நகை மோசடியில் ஈடுபட்டவரை மாம்பலம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை வடபழனி, கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோபால்(75). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் கடந்த 13-ம் தேதி ஒருவர், தன்னை ரியல் எஸ்டேட் தரகர் கோடம்பாக்கம் முருகன் எனக் கூறி அறிமுகப்படுத்திக் கொண்டார்.

பின்னர், தி.நகர் நகரில் உள்ள பிரபலமான நகைக்கடை உரிமையாளர் தனக்கு நன்கு அறிமுகமானவர் எனவும், சென்னை புறநகர் பகுதியில் 100 ஏக்கர் நிலம் வாங்கப் போகிறார். அதேபோல சென்னை நகருக்குள் ஏதாவது காலி இடம் இருந்தாலும் சொல்லுங்கள் அதையும் வாங்கிக் கொள்வார். உங்களுக்கு நல்ல கமிஷன் வாங்கித் தருகிறேன் என கூறியுள்ளார்.

மறுநாள் நகைக்கடை உரிமையாளரைச் சந்தித்து இடம் தொடர்பாக பேசுவோம் என தி.நகர் உஸ்மான் சாலைக்கு கோபாலை அந்த நபர் அழைத்துச் சென்றுள்ளார். நகைக்கடை வாசல் அருகே சென்றபோது, நம்மை வாழ வைக்கும் முதலாளியை பார்க்கச் செல்லும்போது, ஆடம்பரமாகச் செல்லக்கூடாது. எனவே இவற்றை வைத்திருங்கள் என தான் அணிந்திருந்த 2 மோதிரங்களை கழற்றி கோபாலிடம் முருகன் கொடுத்துள்ளார்.

மேலும், ‘உங்கள் கையில் ஏன் அழுக்கு படிந்த மோதிரத்தை அணிந்துள்ளீர்கள். அதைக் கொடுங்கள், உள்ளே சென்று பாலிஸ் போட்டுக்கொண்டு, முதலாளியையும் பார்த்துவிட்டு வருகிறேன்’ என நம்பும்படி பேசி 5 கிராம் மோதிரத்தை வாங்கிச் சென்றுள்ளார்.

நீண்டநேரம் ஆகியும் முருகன் வராததால் சந்தேகம் அடைந்த கோபால் அவரை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, போன் சுவிட்ச்-ஆப் என வந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த கோபால், தன்னிடம் வழங்கப்பட்ட மோதிரங்களை அருகில் உள்ள நகைக்கடையில் பரிசோதித்தபோது அவை கவரிங் என தெரிய வந்தது.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கோபால், மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

இதில், நூதன முறையில் நகை மோசடியில் ஈடுபட்டது திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டைச் சேர்ந்த முருகன்(50) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். இவர் மீது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, வல்லவனூர், விழுப்புரம், திண்டிவனம், சென்னை உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

மேலும், இவர் 5 பெண்களுடன் குடும்பம் நடத்துவதாகவும், முதியவர்களைக் குறிவைத்து இதேபோல் மோசடியில் ஈடுபட்டதாகவும், மோசடி நகைகளை விற்பனை செய்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT