சென்னை: உணவு டெலிவரி நிறுவன பெண் ஊழியரிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஐ.டி. நிறுவன ஊழியர் நண்பருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை வில்லிவாக்கம், சிட்கோ நகர் பகுதியைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கொளத்தூர், சிவசக்தி நகரைச் சேர்ந்த மனுகிருஷ்ணா (28) என்பவர் நேற்று முன்தினம் (15-ம் தேதி) அதிகாலை 4 மணியளவில், பிரியாணி ஆர்டர் செய்துள்ளார்.
அப்போது அந்த பிரியாணியை டெலிவரி செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட டெலிவரி பெண் பேசியபோது, மனுகிருஷ்ணா அந்தப் பெண்ணிடம், ``உங்களது குரல் நன்றாக உள்ளது. உங்களை உடனடியாக பார்க்க வேண்டும்போல் இருக்கிறது; விரைந்து வாருங்கள்''' என்று கூறியுள்ளார்.
இதனால் பதற்றமடைந்த பெண் ஊழியர் தனது கணவருடன் சென்று பிரியாணியை டெலிவரி செய்துள்ளார். அப்போது மனு கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த விஷ்ணு (26) ஆகிய இருவரும், பெண்ணிடம், உங்களை வரச் சொன்னால், நீங்கள் கணவருடன் வந்துள்ளீர்கள் என்று கேட்டதோடு, ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர், இது தொடர்பாக ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், இளைஞர்கள் இருவரும் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து மனு கிருஷ்ணா, அவரது நண்பர் விஷ்ணு ஆகிய இருவரையும் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
விசாரணையில் மனுகிருஷ்ணா தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், விஷ்ணு புகைப்படக் கலைஞராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.