தனது டாட்டூ சென்டரில் வாடிக்கையாளர் ஒருவருக்கு நாக்கை பிளந்து டாட்டூ போட்ட ஹரிஹரன். (அடுத்த படம்) கண்ணுக்குள்ளும், நாக்கை பிளந்தும் டாட்டூ போட்டுக் கொண்ட ஹரிஹரன். 
க்ரைம்

நாக்கை பிளந்து ‘டாட்டூ’ - திருச்சியில் 2 பேர் கைது

செய்திப்பிரிவு

திருச்சியில் ‘பாடி மாடிஃபிகேஷன்’ என்ற பெயரில் நாக்கை பிளந்து ‘டாட்டூ’ செய்தது தொடர்பாக டாட்டூ சென்டர் நடத்தி வந்த இளைஞரும், அவரிடம் டாட்டூ போட்டுக் கொண்டவரும் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி சிந்தாமணி வென்ஸி தெருவைச் சேர்ந்தவர் எஸ்.ஹரிஹரன் (25). இவர் மேல சிந்தாமணி பகுதியில் டாட்டூ சென்டர் வைத்துள்ளார். கடந்த கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மும்பை சென்ற இவர், தனது நாக்கை இரண்டாக கிழித்தும், கண்களுக்கும் ‘டாட்டூ’ போட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்த ஒரு வீடியோவில், இதுபோல நீங்களும் செய்து கொள்ள வேண்டும் என்றால் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து, அவரிடம் ‘டாட்டூ’ போட்டுக் கொண்டு மேலும் 2 பேர் இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டிருந்தனர்.

இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, மருத்துவக் கட்டுப்பாடுகளை மீறி, ஆபத்தான அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் சுகாதார ஆய்வாளர் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், டாட்டூ சென்டர் நடத்தி வந்த ஹரிஹரன், அவரிடம் நாக்கை பிளந்து டாட்டூ குத்திக் கொண்ட அவரது நண்பரான திருவெறும்பூர் கூத்தைப்பாரைச் சேர்ந்த வி.ஜெயராமன் ஆகியோரை கோட்டை போலீஸார் நேற்று கைது செய்தனர். மேலும் 17 வயது சிறுவனை எச்சரித்து அனுப்பினர். அத்துடன், டாட்டூ சென்டருக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

SCROLL FOR NEXT