நாமக்கல்: குடும்பப் பிரச்சினை காரணமாக நாமக்கல் அருகே பெற்றோர் மற்றும் மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் அ.வாழவந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (55). தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி (50). இவர்களது மகன் சுரேந்திரன் (25), கோவையில் உள்ள ஹோட்டலில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்னர், வேட்டாம்பாடியைச் சேர்ந்த சினேகா (23) என்பவருடன் திருமணம் நடந்தது.
இந்நிலையில், சுரேந்திரன்-சினேகா தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கணவரைப் பிரிந்த சினேகா, தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த சுரேந்திரன், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வீடியோ பதிவு செய்து, கோவையில் உள்ள உறவினரின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு நேற்று முன்தினம் அனுப்பியுள்ளார். நேற்று காலை இந்த வீடியோவைப் பார்த்த சுரேந்திரனின் உறவினர், உடனடியாக போலீஸாருக்குத் தகவல் அளித்தார்.
இதையடுத்து, சுரேந்திரன் வீட்டுக்கு போலீஸார் சென்று பார்த்தபோது, சுரேந்திரன், அவரது பெற்றோர் செல்வராஜ், பூங்கொடி ஆகியோர் தனித்தனியாக தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தனர். 3 பேரின் உடல்களையும் மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதல்கட்ட விசாரணையில், தனிக்குடித்தனம் செல்வதில் ஏற்பட்ட பிரச்சினையில் சுரேந்திரன் தற்கொலை செய்து கொண்டதும், இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இருப்பினும், தற்கொலைக்கு வேறு காரணம் எதுவும் உண்டா என்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.