சென்னை: தனியார் நிறுவன ஊழியரின் கிரெடிட் கார்டில் இருந்த ரூ.1,38,000 பணம் மாயமானது தொடர்பாக ராயப்பேட்டை சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ராயப்பேட்டை சீனிவாச பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 7-ம் தேதி ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் திரையரங்கம் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் ரூ.300-க்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு, பணத்தை கிரெடிட் கார்டு மூலம் செலுத்தி உள்ளார்.
இந்நிலையில், அவர் வீட்டுக்கு வந்து தனது செல்போனை பார்த்தபோது, அவரது கிரெடிட் கார்டில் இருந்து 13 முறை ரூ.10,000, 2 முறை ரூ.4,000 வீதம் என ரூ.1,38,000 பணம் எடுக்கப்பட்டிருந்ததாக குறுஞ்செய்திகள் வந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து, தனது கிரெடிட் கார்டு கணக்கை சரி பார்த்தபோது அதில் ரூ.1,38,000 பணம் எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, சீனிவாசன் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.