சென்னை: சென்னையில் முகநூல் மூலம் அறிமுகமான பெண்ணிடம் 8 பவுன் நகையை திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை திருவிக நகரை சேர்ந்தவர் சாரதா (52). இவருக்கு முகநூல் மூலம் சிவா என்ற இளைஞர் அறிமுகமாகி உள்ளார். நாளடைவில் இருவரும், தங்களது செல்போன் எண்ணை பகிர்ந்து, செல்போனில் பேசி பழகி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் 27-ம் தேதி, சாரதா வீட்டுக்கு, சிவா சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து தனது தங்க மோதிரங்கள், செயின், வளையல் உள்ளிட்ட 8 பவுன் நகையை கழற்றி வைத்துவிட்டு, சாரதா குளிக்க சென்றார். அவர் குளித்துவிட்டு வருவதற்குள், சிவா, 8 பவுன் நகையை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதுகுறித்து, சாரதா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து திருவிக நகர் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சாரதாவின் வீட்டுக்கு வந்து நகைகளை திருடிச் சென்ற நபரின் உண்மையான பெயர் ஐயப்பன் (39) என்பதும், கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸார், ஐயப்பனிடம் இருந்த 21 கிராம் நகைகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். ஐயப்பன் ஏற்கெனவே, திருச்சி, கோவை உள்ளிட்ட காவல் நிலையங்களில் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.