சென்னை: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் வெளிமாநில நோயாளிகளிடம் வசூலித்த கட்டணத்தில் நூதன முறையில் கைவரிசை காட்டிய மருத்துவமனை ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய நோயாளிகள் உள் நோயாளியாகவும், புற நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளி மாநிலத்தைச் சேர்ந்த நோயாளிகளுக்கு ரூ.50 அனுமதி (அட்மிஷன்) கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
கட்டண ரசீது: மற்றபடி சிகிச்சை முடிந்து செல்லும்போது, நோயாளிகள் தங்கிய அறைக்கு குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அட்மிஷன் கவுன்ட்டரில் ஒவ்வொரு மாதமும் சுழற்சி முறையில் ஊழியர்கள் பணியாற்றுவர். இந்நிலையில் கடந்த மே மாதம், வெளி மாநில நோயாளிகள் செலுத்திய அட்மிஷன் கட்டணம் உள்ளிட்ட இதர கட்டண வசூலில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதாவது வெளி மாநில நோயாளிகளிடமிருந்து கட்டணம் வசூலித்து விட்டு, அதற்கான ரசீதையும் கொடுத்துள்ளனர். ஆனால், ரசீது எழுதும்போது , ரசீது புக்கில் கார்பன் பேப்பர் வைக்காமல், ரசீதை கொடுத்த பிறகு, கார்பன் பேப்பரை வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது ஆயிரம் ரூபாய் வசூலித்தால், ரூ.50 மட்டுமே வசூல் செய்ததாக கணக்கு காட்டி ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
புழல் சிறையில் அடைப்பு: இது தொடர்பாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணி ராஜன் கொடுத்த புகாரின் பேரில் ரெக்கார்டு கிளார்க்குகள் பெருங்களத்தூர் குபேரன் (50), ஆவடி கலைமகள் (44) ஆகிய இருவரை ராஜீவ்காந்தி மருத்துவமனை வளாக போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.
மோசடி தொடர்பாக அட்மிஷன் கவுன்ட்டரில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர் மேலும், 4 பேருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுகுறித்தும் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.