தூத்துக்குடி: வெளிநாடுகளில் வேலை என அழைத்து செல்லப்படும் பல இளைஞர்களை மிரட்டி ஆன்லைன் மோசடியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவ்வாறு 1,825 பேர் பல்வேறு நாடுகளில் சிக்கியிருப்பது சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை சேர்ந்தவர் கணேசன் மகன் சுப்பிரமணிய சூர்யா (26). பட்டதாரியான இவர், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த நாராயண மணிகண்டன் என்ற உறவினர் மூலம் சிவகாசியை சேர்ந்த வெளிநாட்டு கம்பெனிகளில் வேலை வாய்ப்பு பெற்று தரும் முகவர் வீரமணிகண்டன் என்பவர் சூர்யாவுக்கு அறிமுகமானார்.
இந்நிலையில், சூர்யாவிடம் ரூ.2 லட்சம் வாங்கிய வீரமணிகண்டன், தன்னுடன் ஓமன் நாட்டில் வேலை பார்த்த தஞ்சாவூரை சேர்ந்த பாண்டியன் என்பவர் மூலம் அவருக்கு லாவோஸ் நாட்டில் சீன கம்பெனி ஒன்றில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலை வாய்ப்பு உள்ளதாக கூறி அங்கே அனுப்பி வைத்துள்ளார். ஆனால், பாண்டியன் சீன கம்பெனியில் ரூ.2.38 லட்சத்துக்கு சூர்யாவை விற்றுள்ளார். இதையடுத்து சூர்யாவின் பாஸ்போர்ட், மொபைல் போன் ஆகியவற்றை அந்த கம்பெனியில் பறித்து வைத்துள்ளனர்.
இதையடுத்து, இணையதளம் வாயிலாக இந்தியாவில் உள்ளவர்களை குறிவைத்து பெண்களை போல போலியான ஐடி உருவாக்கி, அதன் மூலம் கிரிப்டோ கரன்சியாக பணத்தை டெபாசிட் செய்ய வைக்கும் மோசடி வேலைக்கு சூர்யாவை சட்ட விரோதமாக அந்த கம்பெனி ஈடுப்படுத்தியுள்ளது. மேலும், இடைவிடாமல் 14 மணி நேரம் பணி செய்ய கட்டாயப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து அங்குள்ள இந்திய தூதரகத்தில் சூர்யா புகார் அளிக்கவே, அவரை மீட்டு இந்தியா அனுப்பியுள்ளனர்.
தாயகம் திரும்பிய சூர்யா அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், சிபிசிஐடி டிஎஸ்பி ராஜகுமார் நவராஜ், உத்தரவின் பேரில் ஆய்வாளர் ஜெயா பிரின்ஸஸ் தலைமையில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணை அடிப்படையில் சிவகாசியை சேர்ந்த வீரமணிகண்டனை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், இவ்வழக்கு தொடர்பாக தஞ்சாவூரை சேர்ந்த பாண்டியன் உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்திய போது, இதேபோல் 1,825 இளைஞர்கள் கம்போடியா, மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் சீன கம்பெனியின் இணையதள மோசடி வேலைகளில் சிக்கியுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த மோசடியில் தொடர்புடைய நபர்களை கைது செய்யவும், இளைஞர்களை மீட்கவும் சிபிசிஐடி போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேவேளையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள் தாங்கள் அணுகும் ஏஜென்ஸி முறையான அனுமதி பெற்று இயங்கி வருகிறதா என்பதை உள்ளூர் போலீசாரிடம் கேட்டு தெளிவுப்படுத்திய பின்னரே வெளிநாட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.