சென்னை: ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்யப்பட்டுள்ளதாகக் கூறி ரூ.3.84 கோடி மோசடி செய்த 3 பேரை சைபர் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். போலீஸ் அதிகாரி பேசுவதுபோல் பேசி மக்களை ஏமாற்றும் சைபர் மோசடிகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.
அந்த வகையில் அண்மையில் நபர் ஒருவருக்கு வந்த தொலைபேசி அழைப்பில் போலீஸ் அதிகாரிகள் பேசுவதாக மோசடியாளர்கள் கூறியுள்ளனர். அவர்கள் பேசியபோது, குறிப்பிட்ட நபர் ஆதார் அட்டையை தவறாகப் பயன்படுத்தி பணமோசடி செய்ததாக செல்போனில் மறுமுனையில் பேசியவர்கள் குற்றம்சாட்டினர்.
தொடர்ந்து அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாகக் கூறி, அதற்கான போலி உத்தரவையும் தயார் செய்து அவருக்கு அனுப்பி, அந்நபரை ஆன்லைன் விசாரணைக்கு உட்படுத்தினர். இதில் அச்சமடைந்திருந்தவரிடம் அவரது வங்கிக் கணக்கிலிருந்து ‘மேற்பார்வை கணக்கு’ என்ற பெயரில் ஒரு வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்புமாறு கட்டளையிட்டனர். இதை நம்பிய அவர், அச்சத்தில் மோசடியாளர்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளுக்கு ரூ.3.84 கோடியை அனுப்பினார்.
பின்னர் தான், மோசடிக்கு உள்ளாகியிருப்பதை உணர்ந்தார். இதையடுத்து சம்பவம் தொடர்பாக மாநில சைபர் குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸார் சென்னை காவங்கரையை சேர்ந்த அப்ரோஸ் (31), திருவள்ளூரை சேர்ந்த லோகேஷ் (30) மற்றும் மாதாங்கி ஹரிஷ் பாபு (34) ஆகியோரை கைது செய்தனர்.
இதுபோன்ற மோசடி அழைப்புகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ள காவல் துறையினர், சைபர் குற்றப் புகார்களுக்கு 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.