சென்னை: மின்கட்டணம் செலுத்தவில்லை என கூறி ஆன்லைனில் முதியவரிடம் ரூ.4.60 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர். சென்னை கோட்டூர் கார்டன்ஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் (66). இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், உங்களது மின்சார கட்டணம் நிலுவையில் இருக்கிறது எனக் கூறி, ஒரு லிங்க் அனுப்புவதாகவும், அந்த லிங்கை தொட்டு மின் கட்டணம் செலுத்துமாறும் கூறியுள்ளார்.
இதை நம்பிய ராஜசேகரன், அந்த லிங்க் மூலம் மின் கட்டணம் செலுத்த முயன்றார். அந்த மர்ம நபர் அனுப்பிய லிங்க்கை தொட்டதும், ராஜசேகரனின், வங்கி கணக்கில் இருந்து முதலில், ரூ.3,60,000 பணமும், அதனை தொடர்ந்து, ரூ.1,00,000 பணமும் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி அவருக்கு வந்துள்ளது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், தனது வங்கி கணக்கை சோதனை செய்த போது, அதில் இருந்து ரூ.4.60 லட்சம் பணம் எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, சேத்துப்பட்டு சைபர் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். புகரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.