மும்பை: மகாராஷ்டிராவின் தானே நகரில் வசிக்கும் ஒருவரிடம் சிபிஐ, சுங்க அதிகாரிகளை போல் காட்டிக்கொண்டு ரூ.59 லட்சத்தை சைபர் கிரிமினல்கள் மோசடி செய்துள்ளனர்.
கடந்த நவம்பர் 26 முதல் டிசம்பர் 2 வரை இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: டெல்லியில் இருந்து சுங்கத் துறை அதிகாரி பேசுவதாக கூறி, தானே நகரை சேர்ந்த 54 நபரை ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். தானே நபரின் பெயரில் வந்துள்ள ஒரு பார்சல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் போதைப் பொருள் இருப்பதாகவும் கூறி அச்சுறுத்தியுள்ளார். மேலும் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் அதன் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து தானே நபரை தொடர்புகொண்ட மற்றொருவர் தன்னை சிபிஐ அதிகாரி என அறிமுகம் செய்துகொண்டுள்ளார். ஆட்கடத்தல், சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட கடும் குற்ற வழக்குகளில் தானே நபரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்குகளை சுமூகமாக தீர்க்க ரூ.59 லட்சம் பணம் செலுத்துமாறும் கேட்டுள்ளார்.
இதனால் பயந்துபோன தானே நபர் அவர்கள் கூறிய பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு ரூ.59 லட்சம் செலுத்தியுள்ளார். முழுப் பணமும் செலுத்தும் வரை அவரை தொடர்ந்து அச்சுறுத்தியுள்ளனர். பிறகு சைபர் கிரிமினல்களால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தானே நபர் போலீஸிஸ் புகார் செய்துள்ளார்.
அவரது புகாரின் பேரில் பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் நுவாபடா போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.