சென்னை: சென்னையில் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி வழக்கில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மேலும் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மோசடியின் பின்னணியில் சீனர்கள் இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரியிடம், மும்பை காவல் துறையில் இருந்து பேசுவதாகக் கூறி ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி செய்து ரூ.88 லட்சம் அபகரித்த வழக்கில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீம் போரா அண்மையில் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர், கடந்த செப்டம்பர் 4-ம் தேதி ஒரே நாளில் ரூ.3.82 கோடி மோசடி செய்திருப்பதும், அந்த பணத்தை 178 வங்கி கணக்குகளுக்கு அனுப்பியிருப்பதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீஸார், 178 வங்கி கணக்குகளையும் கண்டறிந்து, அதை மீட்பதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே சிறையில் அடைக்கப்பட்ட பிரதீம் போராவை சைபர் குற்றப்பிரிவினர் தங்களது காவலில் எடுத்து விசாரணை செய்தனர். இதில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் போலீஸார் அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டிக்கு சென்று விசாரணை செய்தனர்.
மேலும், பிரதீம் போராவுடன் இணைந்து ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடியில் ஈடுபட்டதாக துருபாஜோதி மஜிம்தார்(25), ஸ்வராஜ் பிரதான்(22), பிரசாந்த் கிரி(21), பிரஞ்ரல் ஹசாரிகா(28) ஆகிய 4 பேரைக் கைது செய்ததாக சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், டெல்லி, கொல்கத்தா, கேரளா, ஜெய்ப்பூர், மும்பை, கோவா ஆகிய இடங்களில் உள்ள தங்களது முகவர்கள் மூலம் பொதுமக்களின் செல்போன் தொடர்பு எண்கள், அவர்கள் குறித்த விவரங்களை பெற்றிருப்பதும், அந்த விவரங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றியும், மிரட்டியும் பணம் பெற்றுள்ளனர்.
அந்த பணத்தை கம்போடியா, வியட்நாம், தைவான், பாங்காங் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் தங்களது சீன முதலாளிகளுக்கு அனுப்பியிருப்பதும், இதற்கான கமிஷன் தொகையை சீன முதலாளிகள் இவர்களுக்கு வழங்கியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்குத் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.