க்ரைம்

பழநியில் சானிடைசர் பேரல் வெடித்து அருகிலிருந்த கார் தீப்பற்றி எரிந்தது

ஆ.நல்லசிவன்

பழநி: பழநி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட தண்டபாணி நிலையத்தில் சானிடைசர் பேரல் வெடித்து அருகிலிருந்த கார் தீப்பற்றி எரிந்தது.

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக தேவஸ்தானம் சார்பில் குறைந்த கட்டணத்தில் தங்கும் அறைகள் உள்ளன. அதில், ஒன்றான தண்டபாணி நிலையம் தங்கும் விடுதி வளாகத்தில் வெளியே வைத்திருந்த சானிடைசர் பேரல்கள் திடீரென வெடித்தது. இதில், அருகில் நின்றிருந்த கேரள பக்தர்கள் வந்த காரில் தீப்பற்றி எரிந்தது.

தீயை அணைக்க முயன்ற ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பிச்சாலு (50), முருகன் (45) ஆகியோர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக காரில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். விபத்து குறித்து பழநி அடிவாரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT