க்ரைம்

இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட காதலுக்கு எதிர்ப்பு: கள்ளக்குறிச்சி இளைஞர் திருநெல்வேலியில் கொலை

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் விஜய்(25) திருநெல்வேலி அருகே நேற்று கொலை செய்யப்பட்டார். இதில் காதலியின் சகோதரர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் விஜய்(25). இவருக்கும், பாளையங்கோட்டை அண்ணா கீழத்தெருவைச் சேர்ந்த ஜெனிபர் சரோஜா(23) என்பவருக்கும், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்தனர். கடந்த 10 நாட்களுக்குமுன் தனது காதலனோடு சேர்ந்து வாழ்வதற்காக வீட்டைவிட்டு வெளியேறிய ஜெனிபர் சரோஜா, கள்ளக்குறிச்சிக்கு விஜயின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது, கணவரைப் பிரிந்து விஜயின் சகோதரி அங்கே வாழும் நிலையில் அப்பிரச்சினை தீர்ந்த பிறகு, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து வைப்பதாக அறிவுரை கூறிய விஜயின் குடும்பத்தினர், ஜெனிபர் சரோஜாவை மீண்டும் திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கிடையே, ஜெனிபர் சரோஜாவின் குடும்பத்தினர், இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், காதலனை மறக்க முடியாமல் வாழ்ந்து வந்த ஜெனிபர் சரோஜா, கடந்த 28-ம் தேதி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால், விஜயை திருநெல்வேலிக்கு வருமாறு சரோஜாவின் சகோதரர் புஷ்பராஜ் சிம்சன் அழைத்துள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக நம்பி, நேற்று காலை ரயில் மூலம் விஜய் திருநெல்வேலி வந்தார். பின்னர், பாளையங்கோட்டை சாந்தி நகர் 24-வது தெருவிலுள்ள வீட்டில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அப்போது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அங்கிருந்த பழைய கட்டிடப் பொருட்களைக் கொண்டு தாக்கியும், அரிவாளால் வெட்டியும் விஜய் படுகொலை செய்யப்பட்டார். விஜயின் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் விஜயகுமார், தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் ஆனந்தி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இக்கொலை தொடர்பாக, புஷ்பராஜ் சிம்சன், அவரது நண்பர் சிவா ஆகிய இருவரையும் பாளையங்கோட்டை போலீஸார் கைது செய்தனர்.

இன்ஸ்டாகிராம் காதலால் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT