க்ரைம்

கிரெடிட் கார்டை தவறாக பயன்படுத்தியதாக போலீஸ் அதிகாரிக்கே போன் செய்து மிரட்டிய சைபர் கிரைம் கும்பல்

செய்திப்பிரிவு

மத்திய பிரதேசத்தில் போலீஸ் அதிகாரி ஒருவருக்கே போன் செய்து சைபர் கிரைம் கும்பல் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ம.பி.யின் இந்தூரில் காவல் துறை குற்றப் பிரிவின் கூடுதல் துணை ஆணையராக (டிசிபி) இருப்பவர் ராஜேஷ் தண்டோதியா. இவர் நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு அலுவலகத்தில் இருந்தபோது அவருக்கு செல்போனில் ஓர் அழைப்பு வந்தது. ராஜேஷின் கிரெட் கார்டில் இருந்து ரூ. 1,11,930-க்கு மோசடி பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும் இது தொடர்பாக மும்பையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த கிரெடிட் கார்டு 2 மணி நேரத்தில் முடக்கப்படும் எனவும் எதிர்முனையில் இருந்தவர் கூறியுள்ளார். பிறகு இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவருடன் வீடியோ அழைப்பில் பேசுமாறு அந்த நபர் அச்சுறுத்தியுள்ளார்.

இதையடுத்து வீடியோ அழைப்பில் வந்த நபர் எதிர்முனையில் போலீஸ் அதிகாரி ஒருவர் இருப்பதை கண்டு உடனடியாக அழைப்பை துண்டித்து விட்டார். இது தொடர்பாக இந்தூர் கூடுதல் டிசிபி ராஜேஷ் தண்டோதியா கூறும்போது, “எனது கிரெடிட் கார்டை நான் தவறாகப் பயன்படுத்தியதால் என் மீது மும்பை, மேற்கு அந்தேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளவும் நான் 2 மணி நேரத்துக்குள் காவல் நிலையம் வரவேண்டும் என்றும் என்னிடம் கூறினர். என்னால் உடனடியாக அங்கு செல்ல முடியாது என்று கூறியதால் உயரதிகாரி ஒருவருடன் வீடியோ அழைப்பில் பேசுமாறு கூறினர். இதையடுத்து வீடியோ அழைப்பில் வந்த நபர், போலீஸ் சீருடையில் என்னை பார்த்ததும் அழைப்பை துண்டித்து விட்டார். இந்த மோசடி முயற்சியை அம்பலப்படுத்தவும் எனது அனுபவத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்காகவும் நான் வேண்டுமென்றே அந்த கும்பலிடம் உரையாடலை தொடர்ந்தேன்" என்றார்.

SCROLL FOR NEXT