சென்னை: பணி வழங்காத விரக்தியில், அரசு பேருந்தில் ஏறி அத்து மீறி இயக்கி காவல் துணை ஆணையர் அலுவலக சுவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய பணியாளரால் அடையாறில் நேற்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை அடையாறில், அடையாறு பேருந்து பணிமனை உள்ளது. இங்கிருந்து பல்வேறு வழித்தடங்களில் தினமும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இங்கு குணசேகர் (50) என்பவர் தொழில் நுட்ப பணியாளராக (மெக்கானிக்) பணி செய்து வந்தார். பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட காரணத்தினால் கடந்த 10 நாட்களாக இவருக்கு பணி ஏதும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (21ம் தேதி) அதிகாலை, அடையாறு பணிமனைக்கு வந்துள்ளார். வந்தவர் அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து ஒன்றின் மீது, அத்து மீறி ஏறி அதை தாறுமாறாக அதிவேகமாக இயக்கி உள்ளார்.
இதில், கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து அடையாறு பணிமனை நேரெதிரில் உள்ள அடையாறு காவல் துணை ஆணையர் அலுவலக சுற்றுச் சுவர் மீது மோதி நின்றது. இதில், சுற்றுச் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மேலும், சுற்றுச் சுவர் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சேதம் அடைந்தது. அளவுக்கு அதிகமான மது போதையில் குணசேகர் இதுபோல் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, போக்குவரத்து கழக அதிகாரிகள் அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அடையாறு துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் அடையாறு காவல் நிலையம், அடையாறு உதவி ஆணையர் அலுவலகம், மற்றும் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையமும் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ‘‘நேற்று அதிகாலை 2.25 மணிக்கு அடையாறு பணிமனையில் பேருந்து எண் ஏடிஜே 1541 பேருந்தை குணசேகர் என்ற தொழில்நுட்ப பணியாளர் பேருந்தை தன்னிச்சையாக இயக்கி சென்று பணிமனைக்கு எதிரே உள்ள காவல்நிலைய சுற்று சுவரில் இடித்து விபத்து ஏற்படுத்தியுள்ளார்.
இவர் பணிக்கு சரியாக வராத காரணத்தால் ஏற்கனவே அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது அவர் பணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று அதிகாலை அவர் சற்றும் எதிர்பாராத விதமாக பணிமனைக்குள் நுழைந்து பேருந்தை இயக்கி இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அவர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.