க்ரைம்

ரவுடி சீசிங் ராஜா தொடர்புடைய 14 இடங்களில் போலீஸார் திடீர் சோதனை

செய்திப்பிரிவு

சென்னை: போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட பிரபல கூலிப்படை தலைவன் சீசிங் ராஜா தொடர்புடைய 14-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீஸார், வருவாய்த் துறையினர் ஒருங்கிணைந்து நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, பல்வேறு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஆந்திர மாநிலம் சித்தூரை பூர்வீகமாக கொண்டவர் சீசிங் ராஜா(51). சென்னை கிழக்கு தாம்பரம், ராமகிருஷ்ண புரம், சுபாஷ் சந்திரபோஸ் தெருவில் மனைவியுடன் வசித்து வந்தார். ஆரம்ப காலத்தில் அடிதடி, மோதல் என சிறு சிறு குற்ற வழக்குகளில் சிக்கினார். பின்னர் பிரபல ரவுடியாக வலம் வந்த படப்பை குணாவுடன் நட்பு ஏற்பட்டது.

சீஸிங் ராஜா மீது 6 கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு, துப்பாக்கி முனையில் மிரட்டுதல் என சுமார் 39 வழக்குகள் இவர் மீது பாய்ந்தது. மேலும், 10-க்கும் மேற்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் சீசிங் ராஜாவுக்கு பிடியாணை பிறப்பித்தது.

இந்நிலையில், வேளச்சேரி போலீஸார் அவரை கடந்த செப்டம்பர் மாதம் ஆந்திராவில் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். பின்னர், அவர் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்ய சென்றபோது, அந்த துப்பாக்கியால் போலீஸாரை சுட முயன்றார். சுதாரித்துக் கொண்ட போலீஸாரின் தடுப்பு தாக்குதலில் என்கவுன்ட்டர் மூலம் சீசிங் ராஜா கொல்லப்பட்டார்.

இதற்கிடையே சீசிங் ராஜாவால் பாதிக்கப்பட்ட தொழில் அதிபர்கள், தொழில் நிறுவன உரிமையாளர்கள், பொது மக்கள் என பல தரப்பினர் தங்களது சொத்துகளை மீட்டுத் தர வேண்டும் என தாம்பரம் காவல் ஆணையரிடம் அடுத்தடுத்து புகார் அளித்தனர்.

இதையடுத்து தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் உத்தரவுப்படி, பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் 14 காவல் ஆய்வாளர்கள் உட்பட 200 போலீஸார் அடங்கிய தனிப்படை போலீஸார், வருவாய்த் துறை அதிகாரிகள் உதவியுடன் சீசிங் ராஜாவுக்கு சொந்தமான வீடுகள், அவரது உறவினர்கள், நண்பர்கள், தொடர்பில் இருந்தவர்களின் வீடு, அலுவலகம் என 14-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலை சோதனை நடத்தினர்.

இச்சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், ரியல் எஸ்டேட் தொடர்பான முக்கிய ஆவணங்கள், நிலம் தொடர்பான வரைபடங்கள், வங்கி இருப்பு தொகை விபரங்கள், உள்பட பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களை போலீஸார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT