சென்னை: கத்தி முனையில் பழக்கடை உரிமையாளரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக இருவரை புதுவண்ணாரப்பேட்டை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, பார்த்தசாரதி 5வது தெரு பகுதியில் வசிப்பர் காதர் (24). பூக்கடை பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த 15ம் தேதி இரவு கடை வியாபாரம் முடித்து வீட்டிற்கு செல்ல பேருந்தில் ஏறி, கண்ணன் ரவுண்டனா பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் காதரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த பணம், செல்போனை பறித்து தப்பினர். அதிர்ச்சி அடைந்த காதர் இதுகுறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்படி, பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
முதல் கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதை சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீஸார் துப்பு துலக்கினர். இதில், வழிப்பறி குற்றத்தில் ஈடுபட்டதாக பழைய வண்ணாரப்பேட்டை, நாகாத்தம்மன் கோயில் பின்புறம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் (21), அவரது கூட்டாளி அதே பகுதி போஜராஜன் நகர் 1வது தெருவைச் சேர்ந்த ரோஷன் (24) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
முன்னதாக நடைபெற்ற விசாரணையில் கைதான தனுஷ் மீது ஏற்கனவே 1 கொலை முயற்சி உட்பட 3 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.