பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே சிறுவாபுரியில் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து திரும்புகின்றனர். சிறுவாபுரி முருகன் கோயில் வாசல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில், பூஜைப் பொருட்கள், உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகள் பக்தர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளன.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு வந்த தம்பதி, கோயில் வாசலில் உள்ள நடைபாதை கடைகளில் ஒன்றில் பூஜைப் பொருட்கள் வாங்கியபோது, பொருட்களின் விலையை அக்கடைக்காரர் அதிகமாக சொன்னதாக கூறப்படுகிறது. இதனால், சாலையோர வியாபாரிக்கும், தம்பதிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியது. இதன் விளைவாக நடைபாதை வியாபாரிகள் அந்த தம்பதியை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து, பக்தர்கள் சிலர், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடம் விரைந்த போலீஸார், தம்பதியை நடைபாதை வியாபாரிகளிடம் இருந்து மீட்டு, அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதல் காட்சிகள் அடங்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இத்தாக்குதல் சம்பவம் குறித்து ஆரணி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.