சென்னை: தமிழகத்தில் தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த வழக்கில் 6 பேர் மீது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
சென்னையில் கடந்த ஜூன் மாதம் யூடியூப் சேனல் ஒன்றில், தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவான கருத்துகள் இருந்ததை சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் கண்டறிந்தனர். சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த ஹமீது உசேன் என்பவர், ‘டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ்’ என்ற பெயரில் அந்த யூடியூப் சேனல் மூலம் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக பேசி, மூளைச் சலவை செய்து இளைஞர்களை திரட்டியது தெரியவந்தது.
இதையடுத்து அவர் உட்பட மேலும் சிலரை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கின் விசாரணை என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சென்னை என்ஐஏ அதிகாரிகள், புதிதாக வழக்கு ஒன்றை பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களை அடுத்தடுத்து தங்கள் காவலில் எடுத்து மேலும் துப்பு துலக்கினர். குறிப்பாக அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், நிதி உதவி செய்தவர்கள், வெளிநாட்டு தொடர்புகள் குறித்து தகவல் திரட்டப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த டாக்டர் ஹமீது ஹுசைன், அஹ்மத் மன்சூர், அப்துர் ரஹ்மான், முகமது மொரிஸ், காதர் நவாஸ் ஷெரிப் மற்றும் அகமது அலி ஆகிய 6 பேர் மீது பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ இன்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மேலும், இவ்வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.