குன்றத்தூர்: சென்னை அருகே குன்றத்தூரை அடுத்த மணஞ்சேரி, தேவேந்திரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிரிதரன் (34). இவர் மனைவி பவித்ரா (30), மகள் வைஷாலினி(6), மகன் சாய் சுந்தரேசன்(1) ஆகியோருடன் வசித்து வந்தார். கிரிதரன் குன்றத்தூரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக கடந்த 4 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். குழந்தை வைஷாலினி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்தார்.
அண்மைக் காலமாக இவர்களது வீட்டில் எலி தொந்தரவு அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. எலிகளை கட்டுப்படுத்துவதற்காக சென்னை, தியாகராய நகரில் செயல்பட்டு வரும் பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவனத்தை கிரிதரன் தொடர்பு கொண்டுள்ளார். இதனால் நேற்று முன்தினம் 2 பேர் வந்து அவரது வீட்டில் ஆங்காங்கே எலி மருந்தை தெளித்தனர். மேலும் வீடு முழுவதும் எலிகள் வராமல் இருப்பதற்காக மருந்து அடித்ததாக கூறப்படுகிறது. பிறகு, இரவு அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மருந்திலிருந்து பரவிய நெடி தாங்காமல் நள்ளிரவு நேரத்தில் குழந்தை வைஷாலினிக்கு திடீர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
தொடர்ந்து நேற்று அதிகாலை அனைவருக்கும் வாந்தி, மயக்கம் நெஞ்சுவலி ஏற்படவே, அனைவரையும் நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை வைஷாலினி மற்றும் சாய்சுந்தரேசன் ஆகியோர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் மயக்கநிலையில், உயிருக்குப் போராடிய கிரிதரன் மற்றும் பவித்ரா ஆகியோருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து குன்றத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருந்து அடித்தவருக்கு வலை: போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் எலி மருந்தை அடித்த நபர்களில் ஒருவர் சங்கரதாஸ் என்பதும், அவர் சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. அவரைப் பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டு உள்ளனர். மேலும், மருந்து அடித்த சென்னை தியாகராய நகர் பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவனத்தின் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.