க்ரைம்

கரூரில் புதிதாக கூண்டு கட்டிவரும் தனியார் பஸ்ஸில் தீ விபத்து - தொழிலாளி உயிரிழப்பு

க.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் தனியார் பேருந்து கூண்டு கட்டும் நிறுவனத்தில், புதிதாக கூண்டு கட்டிவரும் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தொழிலாளி உடல் கருகி உயிரிழந்தார். இது குறித்து தாந்தோணிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் தாந்தோணிமலையில் தனியார் பேருந்து கூண்டு கட்டும் நிறுவனம் உள்ளது. இங்கு பல்வேறு பேருந்துகள் கூண்டு கட்டும் பணி நடந்து வரும் நிலையில், இன்று (நவ.14) பேருந்து ஒன்றின் கூண்டு கட்டுமான இறுதிப் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது மாலை சுமார் 5 மணிக்கு மேல் எதிர்பாராதவிதமாக அந்தப் பேருந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதில் பேருந்துக்குள் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களில் ஒரு சிலர் தப்பி வெளியேறிய நிலையில் ரவிச்சந்திரன் (42) என்பவர் பேருந்துக்குள் சிக்கி உடல் கருகி உயிரிழந்தார்.கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தினர் 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

இதுகுறித்து கரூர் நகர டிஎஸ்பி செல்வராஜ் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். தாந்தோணிமலை போலீஸார் வழக்குப் பதிவு காயமடைந்தவர்களை சிகிச்சைக்காகவும், ரவிச்சந்திரன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்து 2 மணி நேரத்துக்கு மேலாகியும் நிறுவன உரிமையாளர் சம்பவ இடத்துக்கு வராததால் தொழிலாளர்கள், போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT