க்ரைம்

திருவொற்றியூரில் பெண் வியாபாரி கொலை செய்யப்பட்டது ஏன்? - கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்

செய்திப்பிரிவு

சென்னை: திருவொற்றியூரில் பெண் வியாபாரி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பரபரப்பு பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை திருவொற்றியூர் தேரடி, சன்னதி தெருவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிளாட்பாரத்தில் பழம் வியாபாரம் செய்து வந்தவர் கவுரி (50).

இவர் வழக்கம் போல நேற்று முன்தினம் (12-ம் தேதி) பிளாட்பாரத்தில் பழம் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் உள்ள கோயிலுக்கு வரும் பெண்களிடம் ஒருவர் மது அருந்த பத்து ரூபாய் தரும்படி கேட்டு நச்சரித்ததாக கூறப்படுகிறது.

அதைப் பார்த்த கவுரி, எதற்காக இப்படி பணம் கேட்கிறாய்? என்று தட்டிக் கேட்டிருக்கிறார். உடனே அந்த நபர், என்னிடமே கேள்வி கேட்கிறாயா? என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர் அங்கு மதுபோதையில் கத்தியுடன் வந்த அந்த நபர், கவுரியின் கழுத்தில் குத்தி உள்ளார். தடுக்க முயன்ற அவரது கணவர் மாரிக்கும் (55) கத்தி குத்து விழுந்துள்ளது. இருவரின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர்.

உடனடியாக இதுகுறித்து திருவொற்றியூர் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடம் விரைந்து இருவரையும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதித்த மருத்துவர்கள் கவுரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கத்தி குத்து மற்றும் கொலை தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

விசாரணையில் கொலையில் ஈடுபட்டது அதே பகுதியில் பிளாட்பாரத்தில் தங்கி இருக்கும் தொழிலாளி சேகர் (50) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். முன்னதாக அவர் போலீஸாரிம் அளித்துள்ள வாக்குமூலத்தில், ‘‘வழக்கமாக நான் படுத்து தூங்கும் பிளாட்பார பகுதியில் கவுரி அண்மையில் இயற்கை உபாதை கழித்தார். இதுகுறித்து கேட்டபோது, என்னை திட்டியதோடு அவதூறாக பேசினார்.

இதனால், எங்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அவர் என்னை காலணியால் அடித்தார். இதனால், அவர் மீது எனக்கு வன்மம் ஏற்பட்டது. இதற்கு பழிவாங்க சரியான நேரம் பார்த்து காத்திருந்தேன். பல நேரங்களில் என்னை சீண்டும் வகையில் அவரது நடவடிக்கை இருந்தது. இந்நிலையில்தான் சம்பவத்தன்று அந்த வழியாக சென்றவர்களிடம் நான் மது அருந்த பணம் கேட்டேன்.

அதை அவர் தட்டிக்கேட்டதோடு, என்னை ஏளனம் செய்தார். இது எனக்கு அவமானத்தை ஏற்படுத்தியது. இதனால், அங்கிருந்து புறப்பட்டு சென்ற நான் பின்னர், கத்தியுடன் வந்து கொலை செய்தேன்’’ என்று கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். இது ஒருபுறம் இருக்க அங்குள்ள வியாபாரிகளோ, மாமூல் கேட்ட தகராறிலேயே கவுரி கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டினர்.

இதுகுறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிவிலேயே கொலைக்கான உண்மையான காரணம் வெளிவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT