கைது செய்யப்பட்ட விக்னேஷ் 
க்ரைம்

மருத்துவரை கத்தியால் குத்தியது ஏன்? - கைதான இளைஞர் வாக்குமூலம்

செய்திப்பிரிவு

சென்னை: மருத்துவரை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இளை ஞர் வாக்குமூலமாக கூறியுள்ளதாவது: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எனது தாயை கடந்த 6 மாதமாக கிண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று வந்தேன். தற்போது, அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து விட்டது. எனவே, வீட்டுக்குஅழைத்துச் செல்லுங்கள் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.

அங்குள்ள மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்த பின்னர், ‘‘உங்கள் தாய்க்கு அதிக அளவு கீமோதெரபி கொடுத்துள்ளனர். அதனால்தான் இந்த அளவுக்கு பாதிப்பு அதிகரித்துள்ளது’’ என்றனர். இதையடுத்து, மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் சென்று மருத்துவர் பாலாஜியை சந்தித்தேன். என் தாய்க்கு முறையான கிசிச்சை அளித்திருந்தால், அவருக்கு இந்த நிலை வந்திருக்காது என ஒரு மணி நேரம் வாக்குவாதம் செய்தேன். ஆனால், அவர் சரியான பதில் அளிக்காமல் உதாசீனப்படுத்தினார்.

இதனால், கோபம், விரக்தியுடன் வீடு திரும்பினேன். வலியால் என் தாய் வேதனைப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை. இதனால், எனக்கு அதிக கோபம் வந்தது. நேற்று காலை வீட்டு சமையல் அறையிலிருந்த கத்தி ஒன்றை எடுத்து மருத்துவமனை சென்று மருத்துவர் பாலாஜியை சரமாரியாக குத்தினேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

7 பிரிவுகளின் கீழ் வழக்கு: 126(2) அத்துமீறி நுழைதல், 115(2) காயத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுதல், 118(1) ஆபத்தான ஆயுதங்களால் காயம் ஏற் படுத்துதல், 121(2) பணியில் இருக்கும் பொது ஊழியருக்கு காயம் ஏற்படுத்துதல், 109 கொலை முயற்சியில் ஈடுபடுதல், 351(3) உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் காயத்தை ஏற்படுத்தி மிரட்டுதல் என 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT