சென்னை: சமூக வலைதளங்களில் போலி கணக்கு தொடங்கி இளம்பெண்போல பேசி ஆண்களிடம் பணத்தை பறிக்கும் மோசடி செயல், உலகம் முழுவதும் அதிகமாக நடைபெறுகிறது. இதுபோன்ற இணையவழி மோசடி செய்வதற்காகவே பல நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அவை ஏஜெண்டுகளுடன் கூட்டு சேர்ந்து வேலை தேடும் பல இளைஞர்களை அடிமைகளாக விலைக்கு வாங்கி, அவர்களைக் கொண்டு இந்த மோசடி வழியில் பணம் சம்பாதிக்க சித்திரவதைக்கு உள்ளாக்குகின்றன.
இப்படியான ஒரு சம்பவத்தில் சிக்கி கம்போடியாவில் இருந்து மீட்கப்பட்டவர்தான் பரமக்குடியைச் சேர்ந்த இளைஞர் நீதிராஜா. இவர் தனது அனுபவத்தை ‘இந்துதமிழ்த்திசை' நாளிதழிடம் பகிர்ந்துள்ளார். டிப்ளமோ இன்ஜினியரிங் படித்துள்ள இவர் வெளிநாட்டில் வேலை தேட முடிவு செய்துள்ளார். இதன்தொடர்ச்சியாக கம்போடியாவில் இருக்கும் தனது நண்பர் மூலம் அந்நாட்டில் ‘டேட்டா என்ட்ரி’ வேலைக்கு ஆள் தேவை என்பதை அறிந்தார். இதையடுத்து அந்த வேலையில் சேர்வதற்காக ரூ.2.5 லட்சம் கடன் வாங்கி கொடுத்து பணியில் சேர்ந்துள்ளார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது: என்னுடன் சேர்த்து இந்தியாவில் இருந்து 3 பேர் கம்போடியா சென்றோம். அங்கு புனோம் பென் நகரத்தில் உள்ள அந்நிறுவனத்தில் எனது நண்பர், எங்களை வேலைக்கு சேர்த்துவிட்டுச் சென்றுவிட்டார். அது ஒரு சைபர் மோசடி சிறைச்சாலை என்பது அப்போது தெரியவில்லை. முதலில் அந்நிறுவனம் எங்களது ஆங்கில அறிவு, கணினி அறிவையும்,பின்னர் சமூக வலைதள ஈடுபாட்டையும் பரிசோதித்தது. இதனால் அந்த நிறுவனத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டது. அதன்பிறகுதான் எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அவர்கள் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்ட்ராகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அழகான பெண்கள் பெயரில் எங்களுக்கு போலி கணக்குஉருவாக்கி கொடுத்து, அதன்மூலம்அமெரிக்காவில் சமூக வலைதளங்களில் உலாவும் பணக்கார ஆண்களை, பெண்கள்போல பேசி பழகி வலையில் வீழ்த்த சொன்னார்கள்.
பின்னர் அவர்களிடம் பணம்பறிக்க வேண்டும். அதுதான் எங்களுக்கு கொடுத்த வேலை. அவ்வாறுசெய்தால்தான் சம்பளம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்தது. இது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதற்காக, சில அழகான பெண்களையும் பணிக்கு அமர்த்தியுள்ளனர். அந்த வலைதள கணக்கு ஒரு பெண்ணுக்குரியதுதான் என தொடர்பு கொள்ளும் ஆண்களை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காக, அந்த பெண்களை போட்டோ ஷூட் நடத்தி பல்வேறு படங்களை எங்களிடம் கொடுத்து பதிவிடக் கூறுவார்கள். மேலும் சம்பந்தப்பட்ட ஆண்களுக்கு ஏதேனும் சந்தேகம் வந்து வீடியோ காலில் அழைத்தால், அவர்களிடம் இந்த பெண்களை பேச வைத்து அவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவார்கள்.
எங்களைப் போல இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 5 ஆயிரம் இளைஞர்கள் அந்த நிறுவனத்திடம் அடைப்பட்டு கிடந்தனர். வேலை வேண்டாம் நாங்கள் வெளியேறுகிறோம் என்றுசொன்னால், 3 ஆயிரம் அமெரிக்க டாலர் கொடுத்து உங்களை அடிமைகளாக விலைக்கு வாங்கியிருப்பதாகவும் அதை கொடுத்தால்தான் இங்கிருந்து செல்ல முடியும் எனமிரட்டி, தொடர்ந்து வேலை செய்யநிர்பந்திப்பார்கள். இதை எதிர்ப்பவர்களை தனியறையில் அடைத்து, பட்டினிப்போட்டு, அடித்து துன்புறுத்தி சித்தரவதை செய்வார்கள். பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருப்பதால் அங்கிருந்து யாரும் தப்பிச் செல்லவும் முடியாது.
தமிழக அரசு உதவி: அவர்கள் சொன்னபடி நாங்கள்யாரையும் ஏமாற்றி பணம் பறிக்காததால், 6 மாதமாக எங்களுக்கு ஊதியமும் வழங்கவில்லை. தனியறையில் பட்டினியால் வாடினோம். நம்மைகாப்பாற்ற யாராவது வரமாட்டார்களா என ஏங்கி தவித்துக் கொண்டிருந்தோம். அந்தநேரத்தில் பல்வேறு முயற்சிகளின் பலனாக அந்நாட்டு தூதரகத்தின் உதவி கிடைத்தது. பின்னர் அவர்கள் மூலம் அந்நாட்டு ராணுவத்தினர் எங்களை மீட்டனர். அங்கிருந்து தமிழக அரசின் உதவியுடன் சென்னை திரும்பினோம். இவ்வாறு தெரிவித்தார்.
இவர் தற்போது சென்னையில் பணிபுரிந்து வருகிறார். தன்னை ஏமாற்றிய நண்பர் மீதும், அவரது தாயார் மீதும்காவல் நிலையத்தில் புகார் அளித்து, நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருக்கிறார். 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் தனக்கு நீதி கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் இந்த நீதிராஜா.