கிறிஸ்டோபர் சோபி, இசக்கிமுத்து 
க்ரைம்

வழக்கை இழுத்தடித்தால் ஆத்திரம்: நாகர்கோவில் அருகே வழக்கறிஞரை கொன்று, உடலை எரித்த கொடூரம்

செய்திப்பிரிவு

நாகர்கோவில்: சொத்து தொடர்பான வழக்கை இழுத்தடித்து, ஆவணங்களையும் தர மறுத்த வழக்கறிஞரைக் கொன்று, அவரது உடலை எரித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

நாகர்கோவில் அருகேயுள்ள பீமநகரி கிராம குளக்கரையில் நேற்று காலை எரிக்கப்பட்ட நிலையில் ஆண் உடல் கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து சென்ற ஆரல்வாய்மொழி போலீஸார் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, திருப்பதிசாரம் கீழூரைச் சேர்ந்த இசக்கிமுத்து (21) என்பவர், ஒருவரைப் பிடித்து இழுத்துச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் தக்கலை குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சோபி (50) என்பதும், அவரை இசக்கிமுத்து கொலை செய்ததும் தெரியவந்தது.

இசக்கிமுத்துவின் சொத்து தொடர்பான வழக்கை கிறிஸ்டோபர் சோபி நடத்தி வந்துள்ளார். நீண்ட நாட்களாக வழக்கு முடியாமல் இருந்ததால், தான் கொடுத்த தனது சொத்துப் பத்திரங்களை தன்னிடம் திருப்பிக் கொடுக்குமாறு இசக்கிமுத்து கேட்டுள்ளார். ஆனால், வழக்கு முடிந்த பின்னர் ஆவணங்களைத் தருவதாக கிறிஸ்டோபர் சோபி கூறியுள்ளார்.

இந்நிலையில், கிறிஸ்டோபர் சோபி தனது தோட்டத்தில் நடுவதற்கு வாழைக் கன்றுகள் வேண்டும் என்று இசக்கிமுத்துவிடம் கேட்டுள்ளார். தனது தோட்டத்தில் வாழைக் கன்றுகள் இருப்பதாகக் கூறிய இசக்கிமுத்து, அவரை நேற்று முன்தினம் இரவு தோட்டத்துக்கு வருமாறு அழைத்துள்ளார்.

அங்கு வந்த கிறிஸ்டோபர் சோபியை பீமநகரியில் உள்ள குளக்கரைக்கு அழைத்துச் சென்று கொலை செய்த இசக்கிமுத்து, பின்னர் மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை எடுத்து கிறிஸ்டோபர் சோபியின் உடல் மீது ஊற்றி, தீவைத்து எரித்துள்ளார். பின்னர், அங்கிருந்து அவர் தப்பிச் சென்றுள்ளார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

வழக்கறிஞர் கொலை செய்து, எரிக்கப்பட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இசக்கிமுத்துவை ஆரல்வாய்மொழி போலீஸார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT