நடிகை கஸ்தூரி (கோப்புப் படம்) 
க்ரைம்

நடிகை கஸ்தூரி, யூடியூப் சேனல் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு - திருச்சி போலீஸ் நடவடிக்கை

தீ.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: தமிழ் திரைப்பட நடிகை கஸ்தூரி அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரது இந்தப் பேச்சுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானாவிலும் கடும் கண்டனங்கள் குவிந்தன. தமிழக பாஜகவும் நடிகை கஸ்தூரியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே நடிகை கஸ்தூரி தனது பேச்சுக்கு மன்னிப்புக் கோரினார். ஆனால் நடிகை கஸ்தூரி மீது மாநிலம் முழுவதும் தொடர்ந்து பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி, வயலூர் சாலை, கீதாநகரைச் சேர்ந்த ரெட்டி நலச்சங்கம் செயலாளர் செல்வராஜ் என்பவர் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒரு புகார் மனு அளித்தார்.

அதில், “நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்கள் குறித்து ஆபாசமாகவும், மக்களிடையே பிளவு ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதை நம் தேசம் பாரத் என்ற யூ-டியூப் சேனலில் பார்த்தேன். இதை பார்த்ததிலிருந்து நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். எனவே நடிகை கஸ்தூரி, அவரது பேச்சை ஒளிபரப்பிய யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன், நடிகை கஸ்தூரி மற்றும் அவரது பேச்சை ஒளிபரப்பிய நம் தேசம் பாரத் யூடியூப் சேனல் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

SCROLL FOR NEXT