சென்னை: அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் பெரிய கட்டிட கழிவு பொருளை (சிமென்ட் கலந்த செங்கல்) வைத்த மர்ம நபர்களை ரயில்வே போலீஸார் தேடி வருகின்றனர். ரயிலை கவிழ்க்க திட்டமிடப்பட்டதா என்ற கோணத்தில் ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூருக்கு ஒரு விரைவு ரயில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. இந்த ரயில் அம்பத்தூர் ரயில் நிலையத்தை கடந்தபோது, அம்பத்தூர் ரயில் நிலையம் - திருமுல்லைவாயில் இடையே ரயில் தண்டவாளத்தில் பெரிய கட்டிட கழிவு (சிமென்ட் கலந்த செங்கல்) வைக்கப்பட்டிருந்ததை ரயில் ஓட்டுநர் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு அவர் தகவல் கொடுத்தார். உடனடியாக, ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன்பேரில், ஆவடி ரயில்வே போலீஸார் அங்கு விரைந்து சென்று, தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 3 கிலோ எடை கொண்ட சிமென்ட் கலவை கலந்த செங்கலை அகற்றினர்.
தொடர்ந்து, அங்கிருந்து சிறிது தூரம் வரை நடந்துசென்று போலீஸார் ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, நேற்று காலையும் சம்பவ இடத்துக்கு சென்று மீண்டும் ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து ஆவடி ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். விரைவு ரயில் பாதையில் சிமென்ட் கல்லை வைத்து, ரயிலை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டப்பட்டதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.