சென்னை: மணிப்பூர் தொழிலாளிகளிடையே ஏற்பட்ட மோதலில் கத்தரிக்கோலால் குத்தப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் நகரில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த கைசுவலியன் (32), பவுமிலியன் 28) ஆகியோர் தங்கி உள்ளனர். இவர் சென்னையில் பியூட்டி பார்லர் மற்றும் ஏசி மெக்கானிக் வேலை செய்து வந்தனர்.
உறவினர்களான இவர்கள் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தனராம். இந்த நிலையில், இருவரும் கடந்த 20 நாட்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே மது அருந்தி பொழுதைக் கழித்தனராம்.
இந்த நிலையில், நேற்று மதியம் இருவருக்கும் இடையே மீண்டும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் கோபம் அடைந்த கைசுவலியன், வீட்டிலிருந்த கத்தியை எடுத்து குத்திவிடுவேன் என பவுமிலியனை மிரட்டினாராம். இதனால் ஆத்திரமடைந்த பவுமின்லியன், அருகில் கிடந்த கத்தரிக்கோலால் கைசுவலியனின் நெஞ்சில் குத்தி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த கைசுவலியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்து அங்கு வந்த திருவான்மியூர் போலீஸார், கைசுவலியனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பவுமிலியன் கைது செய்து விசாரணை நடத்தினர். செல்போனில் சத்தமாக பேசியதால் ஏற்பட்ட தகராறில் இந்தக் கொலை நடந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.