க்ரைம்

ஈரோட்டில் பெண் குழந்தையை விற்பனை செய்த 5 பேர் கைது

செய்திப்பிரிவு

ஈரோடு: பெண் குழந்தையை விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக ஈரோட்டில் 4 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நித்யா (28). திருமணமான இவர், கணவரைப் பிரிந்து ஈரோட்டில் வசித்து வந்தார். இவருக்கும், ஈரோட்டைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நித்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்தக் குழந்தையை விற்று விடலாம் என்று தெரிவித்த சந்தோஷ்குமார், ஈரோட்டைச் சேர்ந்த 4 பெண் இடைத்தரகர்கள் மூலம், நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு பெண் குழந்தையை ரூ.4 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளனர். பிறந்து 50 நாட்களேயான தனது குழந்தையை விற்பனை செய்த நிலையில், நித்யா குழந்தையின் நினைவாகவே இருந்துள்ளார். பின்னர், தனது குழந்தையை மீட்க விரும்பிய நித்யா, இது குறித்து மாவட்ட குழந்தைகள் நலக் குழுவுக்குத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, வீரப்பன்சத்திரம் போலீஸாரிடம், மாவட்ட குழந்தைகள் நலக் குழு அதிகாரிகள் புகார் அளித்தனர்.

போலீஸார் விசாரணை நடத்தி, ஈரோட்டைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (28), பெண் இடைத்தரகர்களான செல்வி (47), ராதா (39), பானு (44), ரேவதி (35) ஆகிய 5 பேரை நேற்று கைது செய்தனர். மேலும், ரூ.4 லட்சம் கொடுத்து குழந்தையை வாங்கிய தம்பதியிடமும் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

முழுமையான விசாரணைக்குப் பிறகே, குழந்தை விற்பனை விவகாரத்தில் மேலும் யார் யாருக்குத் தொடர்பு உள்ளது என்பது தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT