க்ரைம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய கார்: போதை இளைஞரை விரட்டி பிடித்த பொதுமக்கள்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூரில் இருந்து நீலாங்கரை நோக்கி சொகுசு கார் நேற்று முன்தினம் இரவு வேகமாக சென்றது. அப்போது பாலவாக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முதியவரை மோதிவிட்டு அந்த கார் நிற்காமல் சென்றுள்ளது.இதை பார்த்த இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் விரட்டி சென்று, காரை ஓட்டிய நபரை எச்சரித்துள்ளார்.

இதனால், ஆத்திரம் அடைந்த அந்த நபர், இருசக்கர வாகனத்தில் வந்த அந்த இளைஞர் மீதும் மோதி இடித்து கீழே தள்ளிவிட்டு அதிவேகமாக கிழக்கு கடற்கரை சாலையில் சென்றார். வழியில், பல வாகனங்களை அடுத்தடுத்து மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

இதை கண்ட பொதுமக்கள் அந்த காரை பின் தொடர்ந்து நீலாங்கரை கபாலீஸ்வரர் சிக்னல்அருகே மடக்கிப் பிடித்துள்ளனர். பொதுமக்கள் ஒன்று கூடியதால் அந்த இளைஞர் நீண்ட நேரம் காரை விட்டு இறங்காமல் காருக்குஉள்ளேயே இருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி கதறி அழுது நாடகமாடியுள்ளார். தகவல் அறிந்து வந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் அந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த நபர் நீலாங்கரையை சேர்ந்த அசோக் என்பதும், தீபாவளி என்பதால் மது அருந்திவிட்டு கிழக்கு கடற்கரை சாலையில் காரை ஓட்டி அடுத்தடுத்து வாகனங்களை இடித்துவிட்டு விபத்து ஏற்படுத்தியுள்ளதும் தெரியவந்தது. இந்த விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர். மேலும்,2 இருசக்கர வாகனங்கள், 4கார்கள் சேதம் அடைந்துள்ளன. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT