க்ரைம்

வேளச்சேரி ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: வேளச்சேரி ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, கடந்த 22-ம் தேதி இரவு போன் அழைப்பு ஒன்று வந்தது. எதிர் முனையில் பேசிய நபர், ``வேளச்சேரி ரயில் நிலையத்தில் குண்டு வைத்துள்ளேன்.

அது சற்று நேரத்தில் வெடித்து சிதறும். முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள்'' எனக் கூறி இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து, வேளச்சேரி ரயில்வே மற்றும் காவல் நிலைய போலீஸார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் 2 மணி நேரத்துக்கும் மேலாகச் சோதனை நடத்தினர்.

முடிவில் சந்தேகப்படும்படியான எந்த பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது. இந்த மிரட்டல் விவகாரம் குறித்து வேளச்சேரி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் மிரட்டல் விடுத்த செல்போன் எண் மூலம் துப்புத் துலக்கியதில், மிரட்டல் விடுத்தது அரியலூர் மாவட்டம் திருமழபாடியைச் சேர்ந்த ஜோதிவேல் (62) என்பது தெரிந்தது. இதையடுத்து, அங்கு சென்று அவரை போலீஸார் கைது செய்தனர். மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துவிட்டதாக ஜோதிவேல் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போலீஸார் மேலும் கூறுகையில், ``ஜோதிவேல், 18 ஆண்டுகளுக்கு முன் மனைவியை கொலை செய்த வழக்கில் சிறை சென்றார். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு உறவினர்கள் யாரும் இவரை கண்டு கொள்ளவில்லையாம். சுய தொழில் தொடங்க உதவி கேட்டு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்துள்ளாராம்.

இந்த நிலையில் எந்த வேலையும் கிடைக்காத விரக்தியில், மதுபோதையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக புரளி கிளப்பியது தெரியவந்தது. மேலும் அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT