க்ரைம்

சென்னை | வதந்தியை பரப்பும் வகையில் ஓட்டல், பள்ளி வாசலுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

செய்திப்பிரிவு

சென்னை: வதந்தியை பரப்பும் வகையில் சென்னையில் தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. இதில், தொடர்புடைய குற்றவாளிகளை சைபர் க்ரைம் போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை தியாகராய நகர் டிரைவர்ஸ் காலனி, தியாகராய சாலையில் பிரபலமான நட்சத்திர ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டலுக்கு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அந்த மின்னஞ்சலில், ஓட்டலில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு இருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மின்னஞ்சலை படித்து பார்த்த ஓட்டல் ஊழியர்கள், உடனே பாண்டிபஜார் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடி பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. வதந்தி பரப்பும் நோக்கத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனர்.

இதேபோல், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசலில் வெடிகுண்டு இருப்பதாக, சென்னை விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் வந்தது. இதையடுத்து போலீஸார், பள்ளிவாசலுக்கு சென்று சோதனை செய்தனர். அங்கிருந்தும் எந்த வெடிபொருளும் கைப்பற்றப்படவில்லை.

இது தொடர்பாகவும் போலீஸார் விசாரணை செய்கின்றனர். இந்த பள்ளிவாசலுக்கு கடந்த இரு வாரங்களில் 4 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடதக்கது.

SCROLL FOR NEXT