சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் ரோந்து போலீஸாரை ஆபாசமாக பேசி திட்டி, மிரட்டல் விடுத்த நபர் தனது பெண் தோழியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரவு 10 மணிக்கு மேல் மெரினா கடற்கரையில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை. மீறி இருப்பவர்களை ரோந்து போலீஸார் அனுப்பி வைத்து விடுவார்கள். அதன்படி, நேற்று (அக்.20) நள்ளிரவு 12.30 மணியளவில் மெரினா உட்புறச் சாலை வழியாக (பட்டினப்பாக்கம் - மெரினா உட்புறச்சாலை) மயிலாப்பூர் காவல் நிலைய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த சாலையில் காரை நிறுத்தி, ஒரு ஆணும் பெண்ணும் ஜோடியாக நெருக்கமாக நின்று பேசிக் கொண்டிருந்தனர். இதையடுத்து, அங்கு சென்ற ரோந்து போலீஸார், அங்கிருந்து செல்லும்படி அவர்களிடம் அறிவுறுத்தினர்.
இதனால், ஆத்திரம் அடைந்த இருவரும் போலீஸாரை இழிவாக பேசியதோடு அநாகரிகமாக நடந்து கொண்டனர். இதனால், உஷாரான ரோந்து போலீஸார் இருவரையும் வீடியோ பதிவு செய்தவாறு "நீங்கள் யார்" என வினவினர். இதனால், ஆத்திரம் அடைந்த ஜோடி"எங்களை வீடியோ எடுக்கிறீர்களா? "நான் உதயநிதி ஸ்டாலினை இங்கேயே கூப்பிடுவேன் பாக்குறியா" என பேசியதோடு, "உன்னால் முடிந்ததை பாரு.. என்னால் காரை எடுக்க முடியாது, உங்க அட்ரஸ் எடுத்து எல்லாத்தையும் காலி பண்ணி விடுவேன்" என அந்த நபர் மிரட்டினார்.
பின்னர், அங்கிருந்து இருவரும் காரை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இன்று காலை முதல் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது ஒருபுறம் இருக்க, பாதிப்புக்கு உள்ளான ரோந்து காவலர் சிலம்பரசன் இந்த விவகாரம் குறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, மிரட்டல், பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். விசாரணையில், நள்ளிரவில் ரோந்து போலீஸாரை மிரட்டி தப்பியது வேளச்சேரி காமராஜபுரத்தைச் சேர்ந்த சந்திர மோகன் (42) என்பதும், உடனிருந்தது அவரது பெண் தோழி மயிலாப்பூரைச் சேர்ந்த தனலட்சுமி (42) என்பதும் தெரியவந்தது. இருவரும் சம்பவ நேரத்தில் மது போதையில் இருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மயிலாப்பூரில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்கி இருந்தபோது போலீஸார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
வசதி படைத்த சந்திரமோகன், பப் ஒன்றில் நிர்வாகியாக உள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுஒருபுறம் இருக்க, “சம்பவத்தன்று இரவு மெரினா கடற்கரை உட்புற சாலையில் நானும், எனது பெண்தோழியும் காரில் வெளியே சாப்பிட நின்று கொண்டிருந்தோம். அப்போது, போலீஸ் அங்கிருந்த எல்லோரையும் எழுப்பினர். மொத்தமாக எழுப்பும்போது எனக்கு கோபம் வந்தது. என்னிடம் போலீஸ் வந்து வெளியேறும்படி சொல்லும்போது நான் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தேன். அதிக மதுபோதையில் இருந்ததால் இவ்வாறு நடந்து விட்டது. என்னை மன்னித்து விடுங்கள்” என சந்திரமோகன் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.