புதுச்சேரி: காலாப்பட்டில் இருந்து இசிஆர் சாலை வழியாக புதுச்சேரி நோக்கி இன்று பிற்பகல் தமிழக பதிவெண் கொண்ட கார் ஒன்று வந்தது. அந்த கார் ராஜீவ் காந்தி சிலை அருகே வந்தபோது அதிகவேகமாகவும், தாறுமாறாகவும் ஓடியது. மேலும் அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. உடனே அந்த காரை பொதுமக்கள் துரத்திச் சென்றனர். இது சம்மந்தமாக போக்குவரத்து போலீஸாக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்களும் அந்த காரை பின்தொடர்ந்தனர்.
கார் ராஜீவ்காந்தி சிலை, இந்திரா காந்தி சிலை, நெல்லித்தோப்பு சிக்னல் வழியாக மீண்டும் இந்திரா காந்தி சிலை நோக்கி சென்றது. இதில் வழிநெடுக இருசக்கர வாகனங்களை இடித்துவிட்டு சென்றது. இதில் 5-க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்தனர். இதனிடையே இந்திரா காந்தி சிலையில் சிக்னல் போடப்பட்டதால் அந்த கார் தொடர்ந்து செல்ல முடியாமல் போக்குவரத்தில் சிக்கியது. உடனே அந்த காரை பின்தொடர்ந்து வந்த பொதுமக்கள் காரில் இருந்து ஓட்டுநரை இறக்கினர். அப்போது அவரும், காரில் வந்த அவரது நண்பர்களும் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்கள் சிலர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
பின்னர் அவர்களை போக்குவரத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். காருடன் காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் சென்னையை சேர்ந்த கரண் (21) என்பதும், அவர் தனது நண்பர்கள் 7 பேருடன், புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் படித்து வரும் நண்பரை பார்க்க வந்ததும் தெரியவந்தது. மேலும் நண்பரை பார்த்துவிட்டு மது குடித்துவிட்டு காரை ஓட்டிவந்து தாறுமாறாக இயக்கியதும் தெரிந்தது. இது சம்மந்தமாக போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.