மாமல்லபரத்தில் மர்மபொருள் வெடித்த கட்டிடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட வெடித்து சிதறிய நாட்டு வெடிகுண்டின் பாகங்களை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். 
க்ரைம்

மாமல்லபுரத்தில் மர்ம பொருள் வெடித்து இடிந்து விழுந்த பழைய காவலர் குடியிருப்பு - போலீஸ் விசாரணை

கோ.கார்த்திக்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் மர்மபொருள் வெடித்ததில் இடிந்து விழுந்த பழைய காவலர் குடியிருப்பு கட்டிடத்தில் இருந்து நாட்டு வெடிகுண்டு பாகங்களை, தடவியல் நிபுணர்கள் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து, அங்கு மேலும் நாட்டு வெடிகுண்டுகள் ஏதேனும் உள்ளதா என ஜேசிபி இயந்திரம் மூலம் கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றி தடயவியல் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையம் அருகே கைவிடப்பட்ட பாழடைந்த காவலர் குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. இக்கட்டிடத்தில் பல்வேறு வழக்குகள் காரணமாக போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 3 இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், நேற்று (அக்.17) இரவு சுமார் 9 மணியளவில், மாமல்லபுரம் நகரம் முழுவதும் கேட்கும் வகையில் பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் ஒன்று மேற்கண்ட கட்டிடத்தில் வெடித்தது.

இதில், கட்டிடத்தின் முன்பக்க சுவர் இடிந்து விழுந்தது. மேலும், இக்கட்டிடத்தின் எதிரே அமைந்துள்ள புதிய காவல் குடியிருப்பில் அமைக்கப்பட்டிருந்த ஜன்னல்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. தகவல் அறிந்த டிஎஸ்பி-யான ரவி அபிராம், காவல் ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்ட போலீஸார் அக்கட்டிடத்தை பார்வையிட்டனர். அப்போது அந்தக் கட்டிடம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததால் தீயணைத் துறையினருக்கு தகவல் தரப்பட்டு அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி அவர்கள் தீயை அணைத்தனர்.

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இடிந்து விழுந்ததாக கூறப்படும் கட்டிடம்

பின்னர், பாழடைந்த கட்டிடத்தில் வெடித்த மர்ம பொருள் என்ன?, குடியிருப்பில் ஏற்கெனவே விட்டுச் சென்ற சிலிண்டர் அல்லது வேறு ஏதேனும் மர்ம பொருள் வெடித்ததா? அல்லது நாட்டு வெடிகுண்டு ஏதேனும் வெடித்ததா? என போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், தடயவியல் நிபுணர்கள், வெடிகுண்டு நிபுணர்கள் குழுவினர் மேற்கண்ட கட்டிடத்தை இன்று (அக்.18) ஆய்வு செய்து, தடயங்களை சேகரித்தனர்.

இதில், நாட்டு வெடிகுண்டு ஒன்று வெடித்துச் சிதறியிருப்பது தெரியவந்தது. இதில், 1 கிலோ அளவுக்கு வெடி மருந்து வைக்கப்பட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இக்கட்டிடத்துக்கு நாட்டு வெடிகுண்டு வந்தது எப்படி? மர்மநபர்கள் யாரேனும் வைத்துச் சென்றார்களா? வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டு தவறுதலாக இங்கு விடப்பட்டதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், வெடிகுண்டு வெடித்த கட்டிடத்தில் வேறு ஏதேனும் நாட்டு வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்பதை அறிவதற்காக, ஜேசிபி இயந்திரம் மூலம் கட்டிட இடிபாடுகளை அகற்றி போலீஸார் சோதனை மேற்கொண்டுள்ளனர். இப்பகுதியில் மேலும் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்லாத வகையில் போலீஸார் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். நட்டுவெடிகுண்டு வெடித்த சம்பவத்தால் சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில், “நாட்டு வெடிகுண்டு வெடித்துச் சிதறிய கட்டிடத்தில் வழக்கு தொடர்பான பழைய ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கட்டிடத்தின் அருகே சிறுவர்கள் சிலர் பட்டாசு வெடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். இதில், பட்டாசு வெடித்து பழைய கோப்புகள் தீப்பிடித்து அதிலிருந்த பரவிய தீயால் கட்டிடத்தில் இருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்துச் சிதறியிருக்கலாம். இருப்பினும், தடயவியல் நிபுணர்களின் அறிக்கைக்கு பிறகே உண்மையான காரணம் தெரியவரும்” என்றனர்.

SCROLL FOR NEXT