திருச்சி: அதிமுக ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்த நி்ர்வாகிகளை வரவேற்பதற்காக கட்சியினர் பட்டாசு வெடித்ததில், திருச்சி காவல் துறைசிறப்பு உதவி ஆய்வாளரின் கண்ணில் காயம் ஏற்பட்டு பார்வை பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக அதிமுக அமைப்புச் செயலாளர் உட்பட 20 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் இரவுநடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அரசு கொறடாவுமான ஆர்.மனோகரன், திருச்சிபுறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார் உள்ளிட்டோரை, அதிமுகவினர் பட்டாசு வெடித்து வரவேற்றனர்.
அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருவெறும்பூர் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியனின் (52) வலது கண்ணில் பட்டாசு துகள்கள் பட்டு, காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அங்குள்ள கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பரிசோதனைக்குப் பின்னர், அவருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுப்பிரமணியன் சேர்க்கப்பட்டார்.
அமைப்பு செயலாளர் உட்பட.. இந்த சம்பவம் தொடர்பாக, அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்கேடி.கார்த்திக், அமைப்புச் செயலாளர் ஆர்.மனோகரன் உள்ளிட்ட 20 பேர் மீது திருவெறும்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.