க்ரைம்

கவரைப்பேட்டை ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா? - ரயில்வே பாதுகாப்பு ஆணையர், போலீஸார் விசாரணை

செய்திப்பிரிவு

சென்னை: கவரைப்பேட்டை ரயில் விபத்துகுறித்து பல்வேறு துறை அதிகாரிகள் கொண்ட கூட்டுக்குழு விசாரணை அறிக்கையில், ரயில் பாதையில் முக்கியமான பாய்ன்ட்டில் இருந்து நட்டுகள் மற்றும் போல்ட்கள் காணாமல் போய்இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நாசவேலைக்கு சாத்தியம் இருப்பதாக தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த 11-ம் தேதி இரவு நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில்மீது கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து பிஹார் மாநிலம் தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி விரைவு ரயில் மோதியது. இதில் 13 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 19 பேர் காயமடைந்தனர். உயிரிழப்பு ஏதுமில்லை.

விபத்து நடந்த இடத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்த ‘ஸ்விச் பாய்ன்ட்’ போல்ட்கள் கழற்றப்பட்டு இருந்ததும், இது வழக்கத்துக்கு மாறாக இருந்ததும் தெரியவந்தது. தடயவியல் நிபுணர்கள்சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, ஆய்வு மேற்கொண்டு மாதிரிகளை எடுத்துச் சென்றனர்.

இதைத்தொடர்ந்து, ரயில் நிலைய அதிகாரி முனிபிரசாத் பாபு அளித்த புகாரின்பேரில் கொருக்குப்பேட்டை போலீஸார் 4 பிரிவுகளில் வழக்குப் பதிந்தனர். 3 டிஎஸ்பி-க்கள் தலைமையில்தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் 3 குழுக்களாக பிரிந்துவிசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், இந்த விபத்து குறித்து பல துறை அதிகாரிகள் கொண்ட குழு விசாரணை நடத்த ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது. இதன்பேரில், சம்பவ இடத்தை 4 மூத்தபொறியாளர்கள் உட்பட 7 அதிகாரிகள் கொண்ட குழு ஆய்வு செய்து12-ம் தேதி அறிக்கை சமர்ப்பித்தது.

இதில், விபத்துக்கான காரணம் குறித்து இக்குழு எந்த முடிவுக்கும் வரவில்லை. விபத்தால் ரயில் பெட்டிகள் மற்றும் பிற ரயில்வே சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் அடிப்படையில் மட்டுமே அறிக்கை இருந்தது. ரயில் பாதையில் ஒரு முக்கியமான பாய்ன்ட்-ல்இருந்து நட்டுகள் மற்றும் போல்ட்கள் காணாமல் போய் இருந்தது கண்டறியப்பட்டுள்ளன. விசாரணைக் குழு அதிகாரிகள் கையெழுத்திட்ட எழுத்துப்பூர்வ அறிக்கை, விபத்து நடந்த அதேநாளில் சமர்ப்பிக்கப்பட்டது என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து ஒரு மூத்த ரயில்வே அதிகாரி கூறும்போது, "ரயில் விபத்துக்கு நாசவேலை காரணம் என்ற கோணத்தை நிராகரிக்க முடியாது” என்றார். தமிழகரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரனிடம் கேட்டபோது, "விபத்து நடைபெற்ற இடத்தில் போல்ட்கள், நட்டுகள் கழன்று இருந்துள்ளது. எனவே, சதிவேலையாக இருக்க வாய்ப்பு உள்ளது. விரைவில் விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிப்போம்" என்றார்.

இன்றும் விசாரணை: இதனிடையே விபத்து தொடர்பாக, ரயில்வே தென் மண்டல பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரிசென்னையில் நேற்று விசாரணையை தொடங்கினார். அவருடன் சென்னை ரயில்வே கோட்டமேலாளர் விஸ்வநாத் ஈர்யா, முதன்மை தலைமை பாதுகாப்பு அதிகாரி கணேஷ் உள்ளிடோர் இருந்தனர். 13 துறை அதிகாரிகளிடம் அவர் விசாரணை நடத்த உள்ளார். முன்னதாக ரயில் நிலையமேலாளர், பாய்ன்ட் மென், இதர பொறியாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். ஒவ்வொருவரிடம் 30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை விசாரணை மேற்கொண்டார். இரண்டாவது நாள் விசாரணை இன்று (அக்.17) நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT