சேலம்: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியதாக நாஞ்சில் சம்பத், பெங்களூரு புகழேந்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சேலம் மாநகர காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச்செயலாளர் சரவணன் தலைமையில் அதிமுகவினர்சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் சரவணன் கூறியதாவது:
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி குறித்து திமுகவைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத், பெங்களூரு புகழேந்தி ஆகியோர் அவதூறாகவும், அநாகரிகமாகவும் சமூக வலைதளங்களில் பேசியுள்ளனர். எனவே, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரண்டரை கோடி தொண்டர்கள் உள்ள அதிமுகவின் பொதுச்செயலாளர் மீது காழ்ப்புணர்வுடன் அவர்கள் பேசியுள்ளனர் . அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.